தூத்துக்குடி: மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.12 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்...!


தூத்துக்குடி: மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.12 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்...!
x
தினத்தந்தி 29 April 2022 12:00 PM IST (Updated: 29 April 2022 11:55 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் தனியார் சரக்கு குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.12 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் இருந்து மலேசியாவுக்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவின் பெங்களூரு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் தூத்துக்குடி வந்தனர். அங்கு சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் சரக்கு பெட்டக குடோனில் சோதனை நடத்தினர்.

அப்போது மலேசியாவுக்கு அனுப்புவதற்காக 9 மரப்பெட்டிகளில் இரும்பு குழாய்கள் வைத்து மூடப்பட்டு இருந்தது. இந்த பெட்டிகளின் மொத்த எடை 12 டன் இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த பெட்டிகளை ஒவ்வொன்றாக திறந்து பார்த்தனர். அப்போது இரும்பு குழாய்களின் கீழ் பலகை வைத்து மறைத்து இரும்பு குழாய்கள் போல கருப்பு பாலித்தீன் பேப்பர்களில் செம்மரக்கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

செம்மரக்கட்டைகளை நூதன முறையில் கடத்துவதற்காக இவை பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.12 கோடி ஆகும்.

திருப்பூரை சேர்ந்த ஏற்றுமதியாளர் ஒருவர் இந்த இரும்பு குழாய் பெட்டிகளை மலேசியா அனுப்புவதற்காக பதிவு செய்தது அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக அவரையும், இந்த செம்மரக்கட்டைகளை ஏற்றி வந்த மதுரையை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவரையும் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.


Next Story