இலங்கை மக்களுக்கு சொந்த நிதியிலிருந்து ரூ.50 லட்சம் உதவி அறிவித்த ஓ.பன்னீர் செல்வம் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி
இலங்கை மக்களுக்காக சொந்த நிதியிலிருந்து ரூ.50 லட்சம் உதவி அறிவித்த ஓ. பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னை
தமிழக சட்டப்பேரவையில் இன்றுபேசிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிட தமிழக அரசு தயாராக உள்ளது. இலங்கையில் மண்ணெண்ணெய் வாங்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ரூபாய் 15 கோடியில் 500 டன் பால் பவுடர்களை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கவும் தமிழக அரசு தயாராக இருக்கிறது.
ரூபாய் 80 கோடி மதிப்பில் 40,000 டன் அரிசியை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கவும் தமிழக அரசு தயாராக உள்ளது. ரூபாய் 28 கோடியில் 137 வகையான மருந்துப் பொருட்களை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது.
இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில், உதவிடும் பொருட்டு, தமிழக அரசு அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, பால் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை அனுப்பி வைக்க தயாராக உள்ளது என்றும், இதற்கு மத்திய அரசு தேவையான அனுமதியை வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசிற்கு ஏற்கனவே மாநில அரசு கடிதம் எழுதியிருக்கிறது. எனினும், இது குறித்து ஒன்றிய அரசிடமிருந்து எந்தவிதமான தெளிவான பதிலும் பெறப்படாத நிலை உள்ளது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இலங்கையில் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி இருக்கிற மக்களுக்கு உதவக் கூடிய வகையில் மக்களுக்கு உணவு, மற்ற அத்தியாவசியப் பொருட்களை உடனடியாக அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்து உரிய அனுமதிகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை இந்த பேரவை வலியுறுத்துகிறது என்கிற தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தைக் கட்சி எல்லைகளைக் கடந்து கருணை உள்ளதோடு, அனைவரும் ஒரு மனதாக ஆதரிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் முன்மொழிந்த தீர்மானத்தை அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரித்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
இதனிடையே, தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய ஆளூர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ., "இலங்கை மக்களுக்கு உதவ ஒரு மாத சம்பளத்தைத் தர தயார்" என்று அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக பேசிய அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், "இலங்கை மக்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் ரூபாய் 50 லட்சம் வழங்க தயார்" என்று அறிவித்தார்.
இதற்கு நன்றி தெரிவித்து பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "இலங்கை மக்களுக்கு சொந்த நிதியாக ரூபாய் 50 லட்சம் வழங்க முன்வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஓ.பன்னீர்செல்வம் ரூபாய் 50 லட்சம் தருவதாக அறிவித்தார். அனைவரும் உதவ முன்வந்தால் மத்திய அரசு மூலம் இலங்கைக்கு நிவாரணத்தை அனுப்ப தமிழகம் தயார்" என்று குறிப்பிட்டார்.
Related Tags :
Next Story