அரசு இடத்தை ஆக்கிரமித்து வணிக வளாகம் பொதுமக்களுடன் நேரு எம் எல் ஏ போராட்டம்
புதுவை அண்ணாசாலையில், அரசு இடத்தை ஆக்கிமிரத்து வணிக வளாகம் கட்டப்படுவதை கண்டித்து பொதுமக்களுடன் நேரு எம்.எல்.ஏ. போராட்டத்தில் ஈடுபட்டார்.
புதுச்சேரி
புதுவை அண்ணாசாலையில், அரசு இடத்தை ஆக்கிமிரத்து வணிக வளாகம் கட்டப்படுவதை கண்டித்து பொதுமக்களுடன் நேரு எம்.எல்.ஏ. போராட்டத்தில் ஈடுபட்டார்.
வணிக வளாகம்
புதுவை அண்ணாசாலை, கண்டாக்டர் தோட்டம் சந்திப்பில் தனிநபர் ஒருவர் வணிக வளாகம் கட்டி வருகிறார். அரசு பள்ளிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து இந்த வணிக வளாகம் கட்டப்படுவதாக கண்டாக்டர் தோட்டம் பகுதி மக்கள் குற்றச்சாட்டி வந்தனர். இதனையடுத்து புதுச்சேரி நகர அமைப்பு குழுமத்தின் மூலம் கட்டுமான பணிகளுக்கு தடைசெய்யப்பட்டது. இருப்பினும் அதனை மீறியும் தற்போது கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
இதையறிந்த கண்டாக்டர் தோட்ட பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் வணிக வளாகம் கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். தொகுதி எம்.எல்.ஏ. நேருவும் ஆதரவு தெரிவித்து பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் நகர அமைப்பு குழும தலைவர் கந்தர்செல்வன் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆக்கிரமித்து வணிக வளாகம் கட்டப்படுவது உறுதி செய்யப்பட்டால் கட்டுமான பணிகளுக்கு தடைவிதிக்கப்படும். மின், தண்ணீர் இணைப்பை உடனடியாக துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நேரு எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அண்ணாசாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story