தமிழகத்தில் 3 இடங்களில் குப்பையில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம்


தமிழகத்தில் 3 இடங்களில் குப்பையில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம்
x
தினத்தந்தி 30 April 2022 2:19 AM IST (Updated: 30 April 2022 2:19 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் விரைவில் 3 இடங்களில், குப்பைகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டம் உருவாக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சென்னை,

சட்டசபையில் பெருங்குடி தீ விபத்து குறித்து அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர்) மற்றும் பல்வேறு உறுப்பினர்கள் கவனஈர்ப்பு கொண்டு வந்தனர். அதற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்து கூறியதாவது:-

பெருங்குடி குப்பைக்கிடங்கு 225 ஏக்கர் பரப்பளப்பில் உள்ளது. 25 ஆண்டுகளாக இங்கு குப்பை கொட்டப்பட்டு வருகிறது. கொடுங்கையூரிலும் பல்வேறு மண்டலங்களில் இருந்து குப்பைகள் கொட்டப்படுகின்றன. பெருங்குடியில் தென்னைநார் கழிவில் வெயிலால் மீத்தேன் வாயு உற்பத்தியாகி தானாகவே தீப்பற்றி விபத்து ஏற்பட்டுள்ளது. இதை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நாளைக்குள் (இன்று) தீ முழுமையாக கட்டுக்குள் வந்துவிடும்.

தண்ணீரைக் கொண்டு அணைக்கப்படுவதால் புகைமூட்டம் வருகிறது. அதிகாரிகள் சம்பவ இடத்திலே இருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் குப்பை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்.

மின்சாரம் தயாரிக்கும் திட்டம்

ஐதராபாத்தில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை நம்முடைய அதிகாரிகள் பார்த்து இருக்கிறார்கள். மேலும் அங்கு குப்பையில் இருந்து மீத்தேன் வாயுவை உருவாக்கி அதை சிலிண்டரில் அடைத்து விற்பனைக்கும் கொண்டு வந்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் விரைவில் 3 இடங்களில், மக்காத குப்பை களைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டம் உருவாக்கப்படும். விரைவில் தமிழகம் முழுவதும் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story