பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு தூக்கு


பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு தூக்கு
x
தினத்தந்தி 30 April 2022 5:31 AM IST (Updated: 30 April 2022 5:31 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு தூக்குதண்டனையும், உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள்தண்டனையும் விதித்து ‘போக்சோ' கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறி உள்ளது.

சென்னை,

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர்கள் குமார் (வயது 48), செல்வி (36) (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளன). இந்த தம்பதிக்கு 18 வயதில் மகள் உள்ளார். இவருக்கு 7 வயதில் இருந்தே தந்தை குமார் பாலியல்ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

அந்த மாணவி 2019-ம் ஆண்டு 15 வயதாக இருந்தபோது அவரது தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அதில் மாணவி கர்ப்பம் அடைந்தார். அதை அறிந்த குமார், கர்ப்பத்தை கலைத்துள்ளார். இதற்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார்.

தோழிகளிடம் அழுது புலம்பல்

7 வயது முதல் 16 வயது வரையில் தனக்கு தந்தையால் நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்தும், அதற்கு தாய் உடந்தையாக இருந்தது குறித்தும் அந்த மாணவி கடந்த 2020-ம் ஆண்டு வேளச்சேரி பள்ளியில் தன்னுடன் பிளஸ்-1 படித்து வந்த தோழிகளிடம் கூறி அழுது புலம்பியுள்ளார்.

அந்த விவரத்தை சக மாணவிகள், அதே பள்ளி ஆசிரியை ஒருவரிடம் தெரிவித்துள்ளனர். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியை, இதுகுறித்து சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தூக்கு தண்டனை

அந்த அமைப்பினர் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தி, அதுகுறித்து கிண்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் மாணவியின் தந்தை, தாய் ஆகியோர் மீது போக்சோ சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

வழக்கை விசாரித்த போக்சோ கோர்ட்டு நீதிபதி எம்.ராஜலட்சுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியின் தந்தைக்கு தூக்கு தண்டனையும், தாய்க்கு சாகும் வரை சிறையில் இருக்கும் வகையில் ஆயுள்தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Next Story