நாகை அருகே தேரின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி


நாகை அருகே தேரின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி
x
தினத்தந்தி 30 April 2022 6:48 AM IST (Updated: 30 April 2022 8:59 AM IST)
t-max-icont-min-icon

நாகை அருகே தேரின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் பலியான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.



நாகை,



நாகை மாவட்டத்தின் திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் நடந்த சித்திரை திருவிழாவின்போது, தேரின் சக்கரம் ஏறியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.  தேருக்கு முட்டுக்கட்டை போட்டபோது இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த தேர் செல்லும்போது அடுத்தடுத்து முட்டுக்கட்டை போட்டபடியே இழுத்து செல்லப்பட்டு உள்ளது.  கோவில் திருவிழாவில் அருகேயுள்ள கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தேர் புறப்பட்டு இரண்டு மணிநேரத்திற்கு பின்பு முட்டுக்கட்டை போடப்பட்டபோது, தீபராஜன் என்ற இளைஞர் மீது தேரின் சக்கரம் ஏறியது.  இந்த சம்பவத்தில் காயமடைந்த தொழிலாளியான தீபராஜன் உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  எனினும் அதில் பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார்.

தஞ்சையை அடுத்த களிமேடு கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.  தஞ்சையை அடுத்த களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் என்கிற திருநாவுக்கரசு சுவாமிகளின் மடம் அமைக்கப்பட்டது. 

அப்பர் சுவாமிகள் இங்கு ஓய்வு எடுத்து சென்றதன் நினைவாக இந்த மடம் கட்டப்பட்டது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதயவிழா 3 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான 94வது ஆண்டு அப்பர் சதயவிழா கடந்த 26ந்தேதி காலை தொடங்கியது. இதனையடுத்து அன்றிரவு 11.30 மணிக்கு மேல் தேர் புறப்பாடு நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் களிமேடு கிராமத்தினர் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். 20 அடி உயரத்திற்கு மின்அலங்காரம் செய்யப்பட்டிருந்த தேரில் அப்பர் படம், சிலை வைத்து பொதுமக்கள் இழுத்து சென்றனர். தேரின் பின்பகுதியில் ஜெனரேட்டர் வைக்கப்பட்டு அதன்மூலம் தேருக்கு மின்சார வசதி செய்யப்பட்டு இருந்தது. 

களிமேடு கிராமத்தில் உள்ள வீதிகளில் தேர் வலம் வந்தது. தேரில் பூசாரி மற்றும் சிறுவர்கள் உள்பட சிலர் மட்டும் அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் உள்ளவர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.  அடுத்த நாள் அதிகாலை 3.10 மணி அளவில் தேர் கீழத்தெரு பகுதிக்கு சென்றது. அந்த தெருவில் உள்ளவர்கள் தேங்காய் உடைத்து வழிபட்டவுடன் தேரை மீண்டும் மடத்திற்கு கொண்டு செல்ல திருப்பினர்.

அப்போதுதான் யாருமே எதிர்பாராத வகையில் அனைவரது நெஞ்சையும் உலுக்கும் வகையில் அந்த துயர சம்பவம் நடந்தது. தேரை திருப்பியபோது பின்னால் வைக்கப்பட்டு இருந்த ஜெனரேட்டரின் எடை அதிகமாக இருந்ததால் தேரை சரியான நிலையில் திருப்ப முடியாமல் போனது. இதனால் தேர் ஒருபக்கமாக இழுக்க தொடங்கியது.

அந்த நேரத்தில் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் தேரின் அலங்கார தட்டி உரசியது. இதன் காரணமாக தேர் மீது மின்சாரம் பாய்ந்து தேர் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே தேரில் அமர்ந்து இருந்த பூசாரி உள்பட சிறுவர்களும், தேரை சுற்றி நின்றவர்களும் தூக்கி வீசப்பட்டனர். 
சாலையில் தண்ணீர் தெளிக்கப்பட்டு இருந்ததால் அவற்றில் மின்சாரம் பாய்ந்து ஆங்காங்கே நின்றவர்களும் சுருண்டு கீழே விழுந்தனர்.

இதனால் தூரத்தில் நின்றவர்கள் செய்வதறியாமல் தவித்தனர். ஒரு சிலர் தேர் எரிவதை பார்த்ததும் தீயின் மீது தண்ணீரை ஊற்றினர். இதனால் அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவர்களும் சுருண்டு கீழே விழுந்தனர்.  அப்போதுதான் விபரீதத்தை உணர்ந்த மக்கள் தேரின் அருகே செல்லாமல் உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர்.  மின்சாரமும் நிறுத்தப்பட்டது.

இதில் மின்சாரம் தாக்கியதில் 2 சிறுவர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது தெரிய வந்தது.  இந்தநிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் 13 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.  இந்த சோக சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

தஞ்சை அருகே களிமேட்டில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் நாகை அருகே மற்றொரு சம்பவம் நடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


Next Story