மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜை - பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்


மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜை - பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
x
தினத்தந்தி 30 April 2022 3:23 PM IST (Updated: 30 April 2022 3:23 PM IST)
t-max-icont-min-icon

அமாவாசையை முன்னிட்டு மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் பழமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்றதுமான அருள்மிகு வனபத்ர காளியம்மன் திருக்கோவில் உள்ளது. 

மாவட்டத்திலுள்ள அம்மன் திருத்தலங்களில் பிரசித்தி பெற்று விளங்கி வரும் இத்திருக்கோவிலில் அமாவாசை முன்னிட்டு கோவில் நடை இன்று அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. 

அம்மனுக்கு 18 வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் மகாதீபாராதனை நடைபெற்றது. ஒளி விட்டு பிரகாசிக்கும் தங்க கவசம் அணிந்து அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் . அதிகாலை 5 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். 

பவானி ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள முத்தமிழ் விநாயகர் சந்நிதி, நாகர் சந்நிதி, பீமன் பகாசூரன் சந்நிதி ஆகிய சந்நிதிகளில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. கொடிமரத்தின் முன்பு பெண்கள் எலுமிச்சை தீபமேற்றி அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர். 

கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா, கோவில் உதவி ஆணையரும் செயல் அலுவலருமான ஹர்ஷினி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்திருந்தனர்.

அமாவாசையையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விழாக்கால பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் மேட்டுப்பாளையம் நகரில் உள்ள அம்மன் கோவில்களில் அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


Next Story