கிருஷ்ணகிரி: 10-ந் தேதிக்குள் கள்ளத் துப்பாக்கிகளை ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற 10-ந் தேதிக்குள் கள்ளத் துப்பாக்கிகளை போலீசிடம் ஒப்படைக்காவிட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் எச்சரித்துள்ளார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் கடந்த ஒரு வாரத்தில் நடத்தப்பட்டசோதனையில் 30 நாட்டுத்துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட் நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருப்பவர்கள் வருகிற மே 10-ந் தேதிக்குள் தாமாக முன் வந்து ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைப்பவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட மாட்டாது. சம்பந்தப்பட்ட உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டிடமோ, போலீஸ் இன்ஸ்பெக்டரிடமோ அல்லது ஊர் தலைவரிடமோ ஒப்படைக்கலாம். அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்பட மாட்டாது.
வருகிற 10-ந் தேதிக்கு பிறகு காவல் துறையினர் நடத்தும் சோதனையில் துப்பாக்கிகள் யாரேனும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது இந்திய படைகலன் சட்டம் 1959&ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது கடந்த ஒரு வாரத்தில் நடத்தப்பட்டசோதனையில் 30 நாட்டுத்துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் 28 துப்பாக்கிகளை தாமாக முன் வந்து ஒப்படைத்துள்ளனர்.
கடந்த ஒரு மாதத்தில் 12 ஆயிரம் கிலோ குட்கா, 49 கிலோ கஞ்சா, 21 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த நாட்டுத்துப்பாக்கிகளை தயாரித்து கொடுப்பவர்கள் யார்? என விசாரித்து வருகிறோம். அவர்கள் மீது கடுமையான நவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா, குட்கா கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே போல சட்ட விரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் கூறினார்.
Related Tags :
Next Story