மாணவர்கள் நடந்துகொள்ளும் விதம் அதிர்ச்சி அளிக்கிறது; அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஐகோர்ட்டு கருத்து
சமீபகாலங்களில் ஆசிரியர்களிடம் மாணவர்கள் நடந்துகொள்ளும் சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நிகழ்வுகள் கையை மீறி சென்றுவிடாமல் தடுக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
மைனர் காதல்
திருவள்ளூர் மாவட்டத்தில் பொருட்காட்சி அரங்கில் வேலை செய்தபோது விஜய் என்ற 15 வயது சிறுவன் லதா என்ற 17 வயது சிறுமி இடையே காதல் மலர்ந்தது (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). அந்த காதலுக்கு லதாவின் தாயார் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் உறவினர் வீட்டுக்கு லதா சென்றார். அவரைத் தேடி அங்கு சென்ற விஜய் நாம் இருவரும் உடலுறவு கொண்டுவிட்டால் நம் காதலை உன் தாயார் ஏற்பார் என்று ஆசை வார்த்தை கூறி லதாவுடன் உறவுகொண்டார். இதில் லதா கர்ப்பம் அடைந்தார்.
அதை அறிந்த அவரது தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆவடி போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் விஜய்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறார் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
மாற்றம் ஏற்படும் பருவம்
அதையடுத்து செங்கல்பட்டு சிறார் முகாமில் அவர் அடைக்கப்பட்டார். அதை எதிர்த்து ஐகோர்ட்டில் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார். இந்த வழக்கில் ஐகோர்ட்டுக்கு உதவும் நபராக வக்கீல் ஆர்.விவேகானந்தன் நியமிக்கப்பட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- உலக சுகாதார அமைப்பின் தகவல்படி இளம்பருவம் என்பது 10 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பருவமாகும். இந்த பருவத்தில்தான் உடலில் ‘ஹார்மோன்' மாற்றங்கள் ஏற்படுகின்றன. சமூக வலைதளம் திரைப்படம் சுற்றுவட்டார பழக்கவழக்கம் உள்ளிட்டவற்றால் பாலியல் நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
தண்டனை ரத்து
இந்த வழக்கில் விஜய்யை விட லதா 2 வயது மூத்தவர். அதேநேரம் இருவருமே மைனர்கள்தான். நேரடி சாட்சிகள் எதுவும் இல்லாமல் வாக்குமூலத்தின் அடிப்படையில் கீழ்கோர்ட்டு மனுதாரருக்கு தண்டனை வழங்கியுள்ளது. உடலுறவு கொண்டால் நமக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் என்று 2 வயது குறைவான விஜய் சொன்னதை அவரைவிட மூத்தவரான லதா ஏற்றுக்கொண்டார் என்று கூறுவது நம்பும்படியாக இல்லை. எனவே கீழ்கோர்ட்டு வழங்கிய தண்டனையை ரத்து செய்கிறேன்.
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
கொரோனா ஊரடங்கு காலத்தில் பெற்றோருடன் நெருக்கம் குறைந்து டி.வி. மொபைல்களில் மூழ்கிய குழந்தைகள் கொரோனாவைவிட கொடிய தொற்றாக மனதை கெடுத்துக்கொண்டுள்ளனர். இதன் மூலம் பதின்ம வயது குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் விளைவாக பள்ளிகளில் ஆசிரியர்களிடமே மாணவர்கள் தவறாக நடந்துகொள்கின்றனர்.
இந்த சூழ்நிலை கையை மீறி சென்றுவிடாமல் தடுக்க கல்வித்துறை சமூகநலத்துறை மூலம் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
Related Tags :
Next Story