தமிழகத்தில் 10 ஆண்டு சாதனையை ஓராண்டில் தி.மு.க. அரசு செய்திருக்கிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


தமிழகத்தில் 10 ஆண்டு சாதனையை ஓராண்டில் தி.மு.க. அரசு செய்திருக்கிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 1 May 2022 12:02 AM GMT (Updated: 1 May 2022 12:02 AM GMT)

‘‘தமிழகத்தில் 10 ஆண்டு செய்ய வேண்டிய சாதனையை ஓராண்டில் தி.மு.க. அரசு செய்திருக்கிறது. இதனை நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்லமுடியும்’’ என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தேனி மாவட்டம், ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

10 ஆண்டு ஆட்சியில்

இந்த விழாவில் பல துறைகளின் சார்பிலான 50-க்கும் மேற்பட்ட திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதான் ஒரு நல்ல ஆட்சியினுடைய இலக்கணம். இதுதான் மக்களுக்கான அரசு. இதைத்தான் திராவிட மாடல் அரசு என்று நாம் பெருமையோடு பேசிக்கொண்டிருக்கிறோம். வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல், அதுதான் என்னுடைய மாடல்,

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய மாடல். அரசாங்கத்தின் அனைத்து திட்ட உதவிகளும் அனைவரையும் சென்று சேரும் வகையில் ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்துபார்த்து நாம் செயல்படுத்தி கொண்டிருக்கிறோம்.

அதேபோல, ஒவ்வொரு தனிமனிதனின் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் இந்த அரசினுடைய இலக்கு. அந்த இலக்கை நோக்கிய பயணம்தான் நம்முடைய திராவிட மாடல். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று வருகிற 7-ந் தேதியுடன் ஓராண்டு முடிவடைகிறது, அதற்கு இன்னும் ஒருவார காலம் இருக்கிறது. இந்த ஓராண்டு காலத்தில் 5 வருடம் ஆட்சியில் இருந்தால், ஏன், 10 ஆண்டு ஆட்சியில் இருந்தால் என்னென்ன செய்திருப்போமோ அதையெல்லாம் இந்த ஒரே ஆண்டிலே நம்முடைய அரசு அந்த சாதனையை செய்திருக்கிறது. இது என்னால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும்.

கொரோனா தடுப்பூசி

கொரோனா என்ற அந்த கொடிய நோய்க்கு ஓரளவுக்கு முற்றுப்புள்ளி வைத்தோம். தடுப்பூசி செலுத்துவதை மிகப்பெரிய மக்கள் இயக்கமாகவே மாற்றினோம். இதுவரை தமிழ்நாட்டில் 91 சதவீதம் பேருக்கு முதல்கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. மகளிருக்கு கட்டணமில்லா பஸ் வசதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா காலத்தில் நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரருக்கு ரூ.4,000 வழங்கினோம்.

13 வகையான மளிகை பொருட்கள் தரப்பட்டது. பொங்கல் பரிசாக 22 மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் யாரும் குறைப்பதற்கு முன்பாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தோம்.

பஞ்சுக்கு ஒரு சதவீத வரி, அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, கூட்டுறவு வங்கிகளில் 14 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி, மகளிர் சுயஉதவி குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி, புதிய கடன்கள் வழங்குதல், கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு உதவித்தொகை, அந்த குழந்தைகளுக்கு ‘இல்லம் தேடி கல்வி' என்ற சிறப்பான திட்டம், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற ஒரு உன்னதமான திட்டம், ‘இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48’ என்ற உன்னத திட்டம், தமிழ்நாட்டு இளைஞர்களை கல்வியில் சிறந்தவர்களாக ஆக்குவதற்காக ‘நான் முதல்வன்' என்ற திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவிகளின் மேல்படிப்புக்காக மாதம் ரூ.1,000 உதவித் தொகை அளிக்கப்பட்டுள்ளது.

‘படிப்படியாக நிறைவேற்றி காட்டுவேன்’

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பெண்ணும் பட்டதாரியாக வேண்டும் என்பதுதான் இந்த அரசினுடைய லட்சியம். அதற்காகத்தான் திராவிட இயக்கம் பல ஆண்டுகாலமாக போராடி வருகிறது. போராடிய லட்சியங்களை அடையத்தான் நாம் சட்டங்களையும், திட்டங்களையும் உருவாக்கி இன்றைக்கு செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். பெண்கள் கல்வியை கற்றுக்கொண்டாலே “பழமை லோகம் இடியுது, தூள்தூளாகும்”. அந்த பயத்தில்தான் கல்வி கற்க பல தடைகளை உருவாக்கியிருக்கிறார்கள். அத்தனை தடைகளையும் நாம் தகர்த்தெறிவோம்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதில் பெரும்பாலான திட்டங்களை, நாங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டோம் என்று சொல்லி உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. இன்னும் 5 சதவீதம், 10 சதவீதம் இருக்கிறது, நான் இல்லை என்று மறுக்கவில்லை. அதையும் நிச்சயமாக, உறுதியாக, படிப்படியாக இந்த ஸ்டாலின் நிறைவேற்றி காட்டுவான் என்பதை நான் மீண்டும் உறுதியோடு தெரிவிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

‘எம்.ஜி.ஆர். காலத்து நாகரிகத்தை எதிர்பார்ப்பது என்னுடைய தவறு’
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந் தேதியை அரசு விழாவாக நடத்திட வேண்டும் என்று சட்டமன்றத்தில் நான் அறிவித்தேன். பா.ஜ.க. கூட இதனை ஆதரித்தது. ஆதரிக்காத கட்சி யார்? (அ.தி.மு.க.) என்று இந்த மேடையில் நான் சொல்ல விரும்பவில்லை.

கருணாநிதி என்று பெயரை சொன்ன காரணத்தால், தன்னுடன் காரிலே வந்த ஒருவரை இறக்கிவிட்டு சென்றவர், எம்.ஜி.ஆர். ‘எனக்கே தலைவர் கலைஞர் தான், அவர் பெயரை நீ சொல்லலாமா?’ என்று அவரை இறக்கி விட்டவர் எம்.ஜி.ஆர். அப்படிப்பட்ட நாகரிகத்தை இன்றைக்கு இருக்கக்கூடியவர்களிடத்தில் எதிர்பார்ப்பது என்னுடைய தவறுதான். ஆனால் இதன் மூலமாக மக்களிடம் தாங்கள் யார் என்பதை அவர்கள் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று தெரிவித்தார்.


Next Story