நடிகர் விவேக் வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயர்; முதல்-அமைச்சரின் மின்னல் வேக நடவடிக்கை
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நடிகர் விவேக் வாழ்ந்த தெருவுக்கு, குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று அவரது பெயர் வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வந்தவர் விவேக். செல்லமாக ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்பட்ட அவர் கடந்த 2021 ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ந்தேதி உயிரிழந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் (ஏப்ரல்) 25-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி மற்றும் குடும்பத்தினர் நடிகர் விவேக் வசித்த பகுதியில் அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
இதைப்போல் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணை தலைவர் பூச்சி முருகனும் தமிழகத்தில் ஏதாவது ஒரு சாலைக்கு நடிகர் விவேக்கின் பெயரை வைத்து அரசு அவரை கவுரவிக்க வேண்டும் என கடிதம் மூலம் கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் மற்றும் திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் அந்த கோரிக்கையை 5 நாட்களில் மின்னல் வேகத்தில் நிறைவேற்றி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து நடிகர் விவேக் வாழ்ந்த அவரது வீடு இருக்கும் சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகர் பிரதான சாலையை, நடிகர் விவேக் பெயருக்கு மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் செயலாளர் சிவ் தாஸ் மீனா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
திரையுலகில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நகைச்சுவை நடிகராக வலம் வந்த பத்ம ஸ்ரீ விவேக் நினைவாக அவர் வசித்து வந்த பெருநகர சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள பத்மாவதி நகர் பிரதான சாலையை ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ என பெயர் மாற்றம் செய்து அரசு ஆணையிடுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள தெருவின் பெயர் பலகையை, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சின்னக் கலைவாணர் விவேக் சாலை என மாற்றப்பட்டது.
Related Tags :
Next Story