எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும் - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும் - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 1 May 2022 7:59 PM GMT (Updated: 2022-05-02T01:29:49+05:30)

ஏமாற்றம் காரணமாக மக்களிடம் ஏற்பட்டுள்ள கோபத்தின் காரணமாக அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும் சூழல் உருவாகி உள்ளதாக மே தின பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

சென்னை,

அ.தி.மு.க. சார்பில் சென்னை புரசைவாக்கத்தில் மே தின விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், மாவட்டச்செயலாளர்கள் பாலகங்கா, ஆதிராஜாராம், வி.என்.ரவி, ஆர்.எஸ்.ராஜேஷ், டி.ஜி.வெங்கடேஷ், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் எம்.இஸ்மாயில் கனி, சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச்செயலாளர் எம்.ஏ.சேவியர் மற்றும் ராயபுரம் மனோ உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தனர்

கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

அ.தி.மு.க.வின் 50 ஆண்டு காலத்தில் 30 ஆண்டுகள் ஆட்சியை ஏற்படுத்தி தந்த பெருமை எம்.ஜி.ஆரை சேரும். உழைப்பவரே உயர்ந்தவர் என்பது எம்.ஜி.ஆரின். தாரக மந்திரம். அ.தி.மு.க. சார்பில் இன்று தொழிலாளர் தினத்தை கொண்டாடி கொண்டிருக்கிறோம். இங்கு கூடியிருக்கும் மக்களை பார்க்கும்போது இனி எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று தெரிகிறது.

இதற்கு காரணம் 505 தேர்தல் வாக்குறுதிகளை பொய் பொய்யாக சொல்லிச் சொல்லி தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தனர். ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு காலம் ஆகியும் எந்த உருப்படியான திட்டத்தையும் மக்களுக்கு கொண்டு வரவில்லை. ஜெயலலிதா கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை பெண்களின் கல்வியை ஊக்குவிப்பதாக கூறி ரத்து செய்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்ட ஸ்கூட்டி திட்டத்தை ரத்து செய்துள்ளனர்.

பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள கோபம்

இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. மக்கள் ஏமாற்றப்பட்டதால், பெண்கள் உட்பட பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள கோபத்தின் காரணமாக இனி எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும் நிலை உருவாகி உள்ளது. எனவே அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும் என்று இந்த மே தின கூட்டத்தில் நாம் உறுதி எடுத்துக் கொள்வோம்.

உழைப்பு உன்னத நிலைக்கு உயர்த்திச் செல்லும். அதற்கு எடுத்துக்காட்டு நம் இரு தலைவர்கள் (எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா) தான். அவர்களின் இந்த உழைப் பிற்கு, அ.தி.மு.க. எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தில் மரியாதை நிச்சயம் உண்டு. உழைப்பால் உயர்ந்தவர்கள் பலர் உன்ன தமான இடத்தை பெற்றிருக்கிறார்கள். அதேபோல் தொழிலாளர்களாகிய நீங்களும் கடுமையாக உழைத்து உயர் பதவிகளுக்கு வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story