விபத்தில் மூளைசாவு அடைந்த வாலிபரின் இதயத்தை சென்னைக்கு 84 நிமிடத்தில் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் டிரைவர்


விபத்தில் மூளைசாவு அடைந்த வாலிபரின் இதயத்தை சென்னைக்கு 84 நிமிடத்தில் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் டிரைவர்
x
தினத்தந்தி 2 May 2022 4:21 AM IST (Updated: 2 May 2022 4:21 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் மூளைசாவு அடைந்த வாலிபரின் இதயத்தை, வேலூரில் இருந்து 84 நிமிடத்தில் சென்னையில் உள்ளவருக்கு மாற்ற ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்த டிரைவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

சென்னை,

திருப்பத்தூர் மாவட்டம் மதனஞ்சேரி குந்தன்வட்டத்தை சேர்ந்தவர் தினகரன் (வயது 21). கட்டிடத்தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவருக்கு வேலூரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் மூளைசாவு அடைந்தார்.

இதையடுத்து அவரது பெற்றோர் தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து டாக்டர்கள் வாலிபரின் உடலில் இருந்து முக்கிய உறுப்புகளை அகற்றினர். இதில் அவரது இதயம் சென்னையில் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 41 வயது ஆண் நோயாளிக்கு தானமாக கொடுக்க தமிழ்நாடு உடல் உறுப்பு ஆணையம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் வேலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொடுக்கப்பட்டன.

84 நிமிடத்தில்...

இதையடுத்து நேற்று மாலை 3.10 மணிக்கு வேலூர் ஆஸ்பத்திரியில் மூளைசாவு அடைந்த தினகரனின் இதயத்தை அதற்கான பிரத்யேக பெட்டியில் வைத்துக்கொண்டு ஆம்புலன்ஸ் சென்னை நோக்கி புறப்பட்டது. இந்த ஆம்புலன்சை சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ் டிரைவர் வேல்முருகன் என்பவர் ஓட்டினார். தொடர்ந்து இந்த இதயம் வேலூரில் இருந்து வருவது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வேலூரில் இருந்து ஆம்புலன்ஸ் வரும் பகுதிகளான வானகரம், கோயம்பேடு, அரும்பாக்கம், அமைந்தகரை, சேத்துப்பட்டு வழியாக சென்னை கிரீம்ஸ் சாலை வரை தேவையான போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சென்னை போக்குவரத்து போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதையடுத்து வேலூரில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் 84 நிமிடத்தில் அதாவது மாலை 4.34 மணிக்கு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியை வந்தடைந்தது.

வைரலாக பரவியது

வேலூரில் இருந்து 84 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் மூலம் இதயம் கொண்டு வரப்பட்ட தகவல் நேற்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதையடுத்து ஆம்புலன்ஸ் டிரைவர் வேல்முருகனை பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்களில் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Next Story