கிழக்கு கடற்கரை சாலைக்கு கருணாநிதி பெயர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


கிழக்கு கடற்கரை சாலைக்கு கருணாநிதி பெயர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 2 May 2022 5:41 AM IST (Updated: 2 May 2022 5:41 AM IST)
t-max-icont-min-icon

‘‘சென்னை-மாமல்லபுரம் இடையே உள்ள கிழக்கு கடற்கரை சாலைக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படும்’’ என்று நெடுஞ்சாலைத்துறை பவளவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை,

நெடுஞ்சாலைத்துறையின் 75-வது ஆண்டு பவள விழாசென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

மலர் வெளியீடு

இதில் பொதுப்பணிகள் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., தலைமை செயலாளர் வெ.இறையன்பு உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முதலில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட இருக்கும் திட்டங்கள் குறித்த மாதிரிகள், புகைப்படங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையின் பவள விழாவையொட்டி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பவளவிழா நினைவு தூணை மு.க.ஸ்டாலின் திறந்துவைத்ததோடு, பவளவிழா மலரையும் வெளியிட்டார். அதனை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பெற்றுக்கொண்டார். பின்னர் ஓய்வுபெற்ற 5 மூத்த என்ஜினீயர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கியும் கவுரவித்தார்.

மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

அதையடுத்து முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் இலச்சினையை (லோகோ) வெளியிட்டதோடு, சென்னை மாவட்டத்தில் மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூ.46 கோடியே 54 லட்சம் மதிப்பில் சாலை மேம்பால பணிக்கும், மதுரை மாவட்டத்தில் ராஜாஜி மருத்துவமனை அருகில் உள்ள கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.199 கோடியே 12 லட்சம் மதிப்பில் சாலை மேம்பால பணிக்கும், ரூ.37 கோடி மதிப்பில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கண்ணாடி இழையிலான பாதசாரிகள் நடைமேம்பால பணிக்கும் அடிக்கல் நாட்டினார்.

இவை உள்பட முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.2,406.30 கோடி மதிப்பீட்டிலான 32 சாலை பணிகள் மற்றும் மேம்பால பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

‘தரமான சாலைகள் அமைத்தாலே போதும்’

அழகான, தரமான, சரியான சாலைகள் அமைத்தாலே போதும், அனைத்து மக்களிடத்திலும் முழுமையான நல்ல பெயரை நாம் வாங்கிடமுடியும். ரோடு சரியில்லை என்றால் முதலில் மக்கள் திட்டுவது அரசை தான். அதேவேளை ரோடு தரமானது என்றால், ‘அடடா பரவாயில்லையே... பளிங்கு மாதிரி இருக்கே...’ என்று அரசைத்தான் மக்கள் பாராட்டுவார்கள். எனவே அரசை ஒரு நல்லப்பெயரை பெற்றுத்தர வேண்டுமென்றாலும் சரி, அவப்பெயரை பெற்றுத்தர வேண்டுமென்றாலும் சரி நெடுஞ்சாலைத்துறை தான் காரணமாக அமைந்திட முடியும்.

ரோடு போடுவதில் பெரிய சிக்கல், அதற்கான நிலங்களை கையகப்படுத்துவது தான். நில எடுப்பு பணிகள் தாமதமாக நடப்பதால் தான், பணிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வர தாமதமாகிறது என்பதை அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவேண்டும். அதற்காக தான் 5 சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரிகள் தலைமையிலான குழுக்கள் கொண்ட 184 பணியிடங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே நிலம் கையக்கப்படுத்துவதில் தாமதம் ஏற்படாது என்று நம்புகிறேன். ஆட்சி அமைத்த பிறகு என்னை வருத்தமடைய செய்யும் அளவுக்கு வந்த புள்ளிவிவரம் என்னவென்றால், சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலம் தமிழகம் என்பது தான்.

ஈ.சி.ஆர். சாலைக்கு கருணாநிதி பெயர்

அதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சாலை விபத்தில் சிக்குவோரின் முதல் 48 மணி நேர அவசர சிகிச்சை செலவை தமிழக அரசே மேற்கொள்ளும் வகையில் இன்னுயிர் காப்போம்-நம்மை காப்போம் 48 என்ற திட்டத்தை கொண்டுவந்திருக்கிறோம். விபத்தில் சிக்கியோரை மருத்துவமனையில் சேர்ப்போருக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை, விபத்தில் சிக்கும் வெளிமாநிலத்தவருக்கும் திட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்துகள் அதிகம் நடக்கும் 556 இடங்களில் வேகத்தடை, சூரிய ஒளி பிரதிபலிப்பான்கள், தற்காலிக தடுப்பான்கள், எச்சரிக்கை குறியீடுகள் அமைக்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் கடந்த ஜனவரியில் சாலை விபத்துகள் பெருமளவு குறைக்கப்பட்டிருக்கின்றன.

நெடுஞ்சாலைத்துறை சாதனைகள் மற்றும் கிடைக்கும் பெருமைகளுக்கு கருணாநிதி தான் காரணம். அதை மனதில் வைத்து ஒரு புதிய அறிவிப்பை வெளியிடுகிறேன். சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை இருக்கக்கூடிய கிழக்கு கடற்கரை சாலை (ஈ.சி.ஆர். சாலை) இனி, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என பெயர் சூட்டப்படும்.

போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கக்கூடிய 59 நகராட்சிகளுக்கு புறவழிச்சாலை அமைக்கப்படும். மேலும் புறவழிச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளேன்.

தரமான சாலையும், தரமான ஆட்சியும்

என்னை பொறுத்தவரை தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் மனநிறைவான வாழ்க்கையை அமைத்துதர, உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தரவேண்டும். அந்த அடிப்படையில் நல்ல சாலைகளை அமைத்து தரவேண்டும். தரமான சாலைகள் அமைத்துள்ளோம் என்றால் தரமான ஆட்சி அமைந்திருக்கிறது என்று பொருள். அந்த பெயரையும், புகழையும் அரசுக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்-பணியாளர்கள் பெற்றுத்தர வேண்டும். பொருளாதாரம், தொழில், சுற்றுலா, வணிகம், வாழ்க்கை மேம்பாடு, மனமகிழ்ச்சி அனைத்தையும் உள்ளடக்கிய சாலைகள் தான் தரமானவை. அந்த தரமான சாலைகளை அமைத்து தரமான வாழ்க்கையை மக்களுக்கு வழங்குவோம் என்று உறுதி ஏற்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் வரவேற்புரையாற்றினார். நிறைவாக முதன்மை இயக்குனர் டி.ஆர்.குமார் நன்றியுரை கூறினார்.

Next Story