சமஸ்கிருத சர்ச்சை விவகாரம்: மருத்துவ கல்லூரி மாணவர்கள் விளக்கம்..!


சமஸ்கிருத சர்ச்சை விவகாரம்: மருத்துவ கல்லூரி மாணவர்கள் விளக்கம்..!
x
தினத்தந்தி 2 May 2022 11:19 AM IST (Updated: 2 May 2022 11:19 AM IST)
t-max-icont-min-icon

சமஸ்கிருதத்தை ஆங்கிலத்தில் எழுதியே வாசித்தோம். சமஸ்கிருதத்தில் படிக்கவில்லை என்று மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.

மதுரை, 

மதுரை மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு புதிதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, மருத்துவக் கல்லூரி ‘டீன்’ டாக்டர் ஏ.ரத்தினவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு வாசித்தனர். அப்போது இப்போகிரெடிக் உறுதிமொழிக்குப் பதிலாக மகரிஷி சரக் சபத் என்ற சமஸ்கிருத உறுதிமொழி வாசிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து தவறுதலாக உறுதிமொழி ஏற்றதாக சர்ச்சை எழுந்த விவகாரத்தில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். 

இதனையடுத்து, மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியின் துணை முதல்வராக பணியாற்றிவரும் டாக்டர் வி.தனலட்சுமி, அதன் பொறுப்பு ‘டீனாக’ செயல்படுவார் என்றும் இன்று (நேற்று) முதல் மறுஅறிவிப்பு வரும் வரை அவர் ‘டீன்’ பதவியை கூடுதல் பொறுப்பாக கவனித்துக்கொள்வார் என மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் நாராயண பாபு அறிவித்திருந்தார். 

இந்த நிலையில் மருத்துவ கல்லூரியின் மாணவர் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, “வரவேற்பு விழா நடத்துவதற்கு போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை. மேலும் நாங்கள் பதிவிறக்கம் செய்த உறுதிமொழிப் படிவத்தை பேராசிரியர்களிடம் என யாரிடமும் காண்பிக்கவில்லை. நாங்கள் தயாரித்தது என்ன என்பது குறித்து அவர்களுக்கு தெரியாது. 

சமஸ்கிருதத்தை ஆங்கிலத்தில் எழுதியே வாசித்தோம். சமஸ்கிருதத்தில் படிக்கவில்லை. இந்த தவறுக்கு மாணவர் அமைப்பு முழுப்பொறுப்பு, முழுக்காரணம். உறுதிமொழி ஏற்பு விவகாரத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. 

சமஸ்கிருதத்தில் இருக்கும் மகரிஷி சரக் சபத் உறுதிமொழி படிவத்தை ஏற்கக் கூடாது என்பது குறித்து அரசிடம் இருந்து எந்தவித தெளிவான வழிகாட்டுதல் இல்லை. நேற்று தான் அதுகுறித்த தகவல் தெரியவந்தது” என்று தெரிவித்தனர். 

Next Story