விருதுநகர்: காரியாபட்டி அருகே கம்பிக்குடி கண்மாயில் மீன்பிடி திருவிழா...!
காரியாபட்டி அருகே கம்பிக்குடி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
காரியாபட்டி,
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கம்பிக்குடி கிராமத்தில் 1,440 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். இந்த ஆண்டு இந்த பகுதியில் நல்ல மழை பெய்ததால் கண்மாய்கள் அனைத்தும் நிரம்பின. இந்த நிலையில் வைகை ஆற்றிலிருந்து நிலையூர்-கம்பிக்குடி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் பலவருடங்களாக நிரம்பாத கம்பிக்குடி கண்மாய் இந்த ஆண்டு முழுமையாக நிரம்பியது. இதனால் இங்கு விவசாயம் முழுமையாக நடைபெற்றது.
இந்த நிலையில் கம்பிக்குடி பெரியகண்மாயில் இன்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. அதிக பாசன நீர் நிலைகளை கொண்ட கம்பிக்குடி கண்மாயில் மீன்களை வளர்ப்பதும், நீர் வற்றியதும் மீன்களை பொதுமக்கள் பிடிப்பது என்பது காலங்காலமாக நடந்து வந்துள்ளது.
கம்பிக்குடி கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் மந்திரிஓடை, சின்ன கம்பிக்குடி, பெரிய கம்பிக்குடி, ஆவியூர், ஆலங்குளம், அச்சங்குளம் போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக கம்பிக்குடி கிராமத்தில் உள்ள வாழவந்த அம்மன் கோவிலில் பொதுமக்கள் ஒன்றுகூடி சாமி கும்பிட்டு பூஜை செய்து கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறையில் வலை, பரி, கச்சா, தூரி, கூடை ஆகிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர்.
அதில் ஒவ்வொருத்தர் வலையில் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால், தேன் கெழுத்தி ஆகிய மீன்கள் கிடைத்தன. குறிப்பாக 5 கிலோ முதல் 10 கிலோ வரை உள்ள பெரிய வகை மின்களும் கிடைத்தன.
Related Tags :
Next Story