பள்ளி பாட புத்தகங்களில் ‘மத்திய அரசு' என்பதற்கு பதிலாக ‘ஒன்றிய அரசு' என மாற்றப்படுகிறதா?
பள்ளி பாட புத்தகங்களில் ‘மத்திய அரசு' என்பதற்கு பதிலாக ‘ஒன்றிய அரசு' என மாற்றப்படுகிறதா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
பள்ளி பாட புத்தகங்களில் சில மாற்றங்களைக் கொண்டு வந்து கடந்த 2018-ம் ஆண்டு புதிய பாட புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிலையில் மேலும் சில திருத்தங்களை பாட புத்தகங்களில் கொண்டு வந்து மீண்டும் புதிய புத்தகங்களை வழங்குவதற்கு பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, பள்ளி பாட புத்தகங்களில் கவர்னரின் அதிகாரம் குறித்து இடம் பெற்றிருக்கும் பாடத்திட்டங்களிலும், மத்திய அரசு என்று எங்கெல்லாம் குறிப்பிடப்பட்டு இருக்கிறதோ அந்த பகுதிகளிலும் திருத்தம் கொண்டுவர இருப்பதாக கூறப்படுகிறது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (எஸ்.சி.இ.ஆர்.டி.) விரிவுரையாளர்கள், பாடத்திட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து இந்த மாற்றங்களை பள்ளி கல்வித்துறை மேற்கொள்ள இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே தமிழக அரசு மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி வரும் நிலையிலும், அரசுக்கும், கவர்னருக்கும் இடையே சட்ட மசோதாக்கள் ஒப்புதல் பெறுவதில் நீடிக்கும் சிக்கல்களுக்கு இடையிலும் பள்ளி கல்வித்துறை இதுபோன்ற மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக வெளிவரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
ஆனால் இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் கல்வித்துறை சார்பில் இருந்து இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story