மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்தினவேலை மீண்டும் நியமிக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்


மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்தினவேலை மீண்டும் நியமிக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 May 2022 11:20 AM IST (Updated: 3 May 2022 11:20 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்தினவேலை மீண்டும் நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை, 

மருத்துவர் ஏ.ரத்தினவேலை மீண்டும் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்க திமுக அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகரிஷி சரக் சபத் உறுதிமொழி குறித்து வருகின்ற செய்திகளை பார்க்கும் போது, தமிழ்நாடு அரசு சார்பில் தெளிவான அறிவுரைகள் வழங்கப்படவில்லை என்பதும், இந்த உறுதிமொழி படிக்கப்படுவது குறித்து யாரிடமும் மாணவர்கள் அனுமதி பெறவில்லை என்பதும், பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகளில் இது போன்ற உறுதிமொழி ஏற்கனவே எடுக்கப்பட்டபோது எவ்வித நடவடிக்கையும் அரசால் எடுக்கப்படவில்லை என்பதும் தெளிவாக தெரிகிறது. இதன் மூலம் மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வர் தெரிந்தே எந்தத் தவறும் செய்யவில்லை என்பதும் தெரிய வருகிறது. 

மருத்துவ மாணவர்கள் புதிய முறையில் உறுதிமொழி ஏற்ற நிகழ்ச்சி வருத்தம் அளிக்கும் செயலாக இருந்தாலும், அரசின் சார்பில் தெளிவான அறிவுரையை முன்கூட்டியே வழங்காதது இந்த நிகழ்வுக்கு ஒரு முக்கிய காரணம் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. 

எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, தவறிழைக்காத மருத்துவக்கல்லூரி முதல்வரை தண்டிப்பது நியாயமற்ற செயல் என்பதைக் கருத்தில்கொண்டு, மருத்துவர் ரத்தினவேலை மீண்டும் மருத்துவக்கல்லூரி முதல்வராக பணியமர்த்தவும், இனி வருங்காலங்களில் முன்கூட்டியே உரிய அறிவுரைகளை அரசின் சார்பில் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அதில் தெரிவித்துள்ளார். 





Next Story