ரம்ஜான் பண்டிகையொட்டி சிறப்பு தொழுகை முஸ்லிம்கள் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறினர்
ரம்ஜான் சிறப்பு தொழுகையின்போது முஸ்லிம்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
புதுச்சேரி
ரம்ஜான் சிறப்பு தொழுகையின்போது முஸ்லிம்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
சிறப்பு தொழுகை
ஈகைத்திருநாளாம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுவையில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கடற்கரை காந்தி திடலில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமானோர் தொழுகை நடத்தினார்கள்.
மேலும் ஏனாம் வெங்கடாசலம்பிள்ளை வீதியில் உள்ள மீரா பள்ளிவாசல், முல்லா வீதி குத்பா பள்ளிவாசல், உருளையன்பேட்டை மஸ்ஜிதே முகமதியா பள்ளிவாசல், நெல்லித்தோப்பு ஈத்கா பள்ளி வாசல், சந்தா சாகிப் வீதி அகமதியா பள்ளிவாசல் உள்பட பல்வேறு பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டன.
கட்டித்தழுவினர்
இந்த தொழுகைகளில் கலந்துகொண்ட முஸ்லிம்கள் ஒருவரையொருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பண்டிகையையொட்டி அக்கம் பக்கத்தினருக்கு பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகளையும் கொடுத்து மகிழ்ந்தனர். மாலையில் முஸ்லிம்கள் குடும்பம் குடும்பமாக சுற்றுலா தலங்களை நோக்கி படையெடுத்தனர். இதன் காரணமாக கடற்கரை, பாரதி பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
வில்லியனூர், அரியாங்குப்பம்
வில்லியனூர் சுல்தான்பேட்டையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொழுகைக்குப் பின் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் உள்ள ஜன்னத்துல் பிர்தவுஸ் தலைமை பள்ளிவாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
காரைக்கால்
காரைக்காலில் மஸ்தான் சாகிப் வலியுல்லாஹ் பெரிய பள்ளிவாசல், கென்னடியர் வீதி மொய்தீன் பள்ளிவாசல், பி.கே சாலை மஸ்ஜிதே ஹுசைனி பள்ளிவாசல், மீராபள்ளி, தெருவுப்பள்ளி மற்றும் அம்பகரத்தூர், திரு-பட்டினம் ஆகிய பள்ளிவாசல்களில் நேற்று காலை முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
த.மு.மு.க. சார்பில் காரைக்கால் தனியார் பள்ளிக்கூட திடலில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் த.மு.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஷேக் அலாவுதீன், மனிதநேய மக்கள் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் நூற்றுக் கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர். காரைக்கால் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. தவ்ஹித் ஜமாஅத் அமைப்பினர் சார்பிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
Related Tags :
Next Story