உற்பத்தி தொழிலுக்கு உகந்த இடமாக தமிழகம் திகழ்கிறது


உற்பத்தி தொழிலுக்கு உகந்த இடமாக தமிழகம் திகழ்கிறது
x
தினத்தந்தி 4 May 2022 12:27 AM IST (Updated: 4 May 2022 12:27 AM IST)
t-max-icont-min-icon

உற்பத்தி தொழிலுக்கு உகந்த இடமாக தமிழகம் திகழ்கிறது என்று ஜப்பான் நாட்டு தூதரக அதிகாரி தாகா மசயுகி பாராட்டு தெரிவித்தார்.

சென்னை,

இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான ராஜாங்க ரீதியான உறவு 70 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. 2 நாடுகளுக்கு இடையேயான வர்த்தக தொடர்பும் வலுவாக உள்ளது. இந்த உறவை மேலும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இந்த நிலையில் விரைவில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளைக் கொண்ட குவாட் மாநாடு விரைவில் கூட உள்ளது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கிறோம். பாதுகாப்புத்துறை தொடர்புடைய மாநாடாக இது இருக்கும்.

ஜப்பானின் முதலீடு

இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டு அரசுகளுக்கு இடையேயான பொருளாதார உறவு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. 2 நாடுகளுக்கு இடையேயான மக்கள் தொடர்பும் வளர வேண்டும் என்பது எங்களின் நோக்கமாகும்.

அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி ஜப்பான் பணத்தை (யென்) இந்தியாவில் ஜப்பான் முதலீடு செய்ய இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஜப்பான் பிரதமரும் அதை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்தரங்கு

இந்திய பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் ராஜாங்க ரீதியான சூழல்களில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையை மனதில் கொண்டு இந்தோ ஜப்பான் தொழில் மற்றும் வர்த்தக சபை ஒரு மிக பெரிய கருத்தரங்கை சென்னையில் 7 மற்றும் 8-ந் தேதிகளில் நடத்த உள்ளது. இதில் இந்தியா மற்றும் ஜப்பானின் ராஜாங்க பிரமுகர்கள், பாதுகாப்பு பிரிவு நிபுணர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் பங்கேற்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், இந்தியா-ஜப்பான் இடையேயான ராஜாங்க உறவின் 70-வது ஆண்டை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டம் 28-ந் தேதி தொடங்கி வரும் டிசம்பரில் முடிகிறது. சென்னையில் உள்ள ஜப்பான் தூதரக அலுவலகத்துடன் இணைந்து, இந்தோ ஜப்பான் தொழில் மற்றும் வர்த்தக சபை, சென்னையில் உள்ள ஏபிகே ஆவ்ட்ஸ் தோசோகை மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்த நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

5 ஆயிரம் ஜப்பான் நிறுவனங்கள்

இந்தியாவில் ஜப்பான் நிறுவனங்கள் 5 ஆயிரம் உள்ளன. அவற்றில் 600 தமிழகத்தில் அமைந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை உற்பத்தி நிறுவனங்களாகும். பெங்களூருவில் ஜப்பானின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் அமைந்துள்ளன. உற்பத்தி தொழிலுக்கான உகந்த பகுதியாக தமிழகம் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களையும் தமிழகத்திற்கு கொண்டு வருவதில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story