குடிப்பதற்கு 50 ரூபாய் தராத மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை


குடிப்பதற்கு 50 ரூபாய் தராத மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 4 May 2022 3:53 AM IST (Updated: 4 May 2022 3:53 AM IST)
t-max-icont-min-icon

குடிப்பதற்கு 50 ரூபாய் தராத மனைவியை கொலை செய்த கணவருக்கு கீழ்கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

சென்னை,

கோவை மாவட்டம் முருகன்பதி கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். தன் மனைவி தெய்வானையிடம் அடிக்கடி வாக்குவாதம், தகராறில் ஈடுபடுவது இவரது வழக்கம்.

கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்டு 3-ந் தேதி ஒத்தக்கல் மண்டபம் ஆற்றங்கரையில் தெய்வானை துணி துவைத்துக் கொண்டிருந்தார்.

குத்திக்கொலை

அப்போது முத்துசாமி அவரிடம், குடிப்பதற்கு 50 ரூபாய் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த முத்துசாமி, மனைவி தெய்வானையை நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதியில் 6 முறை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.

பின்னர் தன்னுடைய வயிற்றில் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தெய்வானையின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சகோதரியும், அவரது கணவரும், தற்கொலைக்கு முயன்ற முத்துசாமியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக முத்துசாமியை கிணத்துக்கடவு போலீசார் கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கை விசாரித்த கோவை முதலாவது செசன்ஸ் கோர்ட்டு, முத்துசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முத்துசாமி மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முத்துசாமி தரப்பில் ஆஜரான வக்கீல், ‘மனைவி கொலை வழக்கில் நேரில் பார்த்த சாட்சியங்கள் இருவரும் உறவினர்கள் என்பதால் அவற்றை ஏற்கக் கூடாது. கொலை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் மனுதாரரிடம் இல்லை’ என்று வாதிட்டார்.

உறுதி

அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். ‘குடிப்பதற்கு பணம் தராததால் கொலை செய்தது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று அவர் கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘மனுதாரர் முத்துசாமி மனைவியை 6 முறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இந்த கொலை உள்நோக்கம் இல்லாமல், திடீரென கோபத்தில் செய்தது என கூறுவதை ஏற்கமுடியாது. குடிப்பழக்கம் காரணமாக தாயுடன் தந்தை முத்துசாமி அடிக்கடி தகராறில் ஈடுபடுவார் என சொந்தப் பிள்ளைகளே சாட்சியம் அளித்துள்ளனர். எனவே, முத்துசாமிக்கு கீழ்கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்கிறோம். அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்’ என்று தீர்ப்பளித்தனர்.

Next Story