தமிழகத்தில் 8-ந்தேதி மெகா கொரோனா தடுப்பூசி முகாம்


தமிழகத்தில் 8-ந்தேதி மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 3 May 2022 11:14 PM GMT (Updated: 3 May 2022 11:14 PM GMT)

தமிழகத்தில் வருகிற 8-ந்தேதி ஒரு லட்சம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேல் நகைச்சுவை கலைஞராக இருந்தவர் நடிகர் விவேக். இவர் கடந்த ஆண்டு உயிரிழந்தார்.

அவர் வாழ்ந்த வீடு இருக்கும் தெருவுக்கு நடிகர் விவேக் பெயர் வைக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து உடனடியாக நடிகர் விவேக் வாழ்ந்த தெரு பெயரை ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ என பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

பெயர் பலகை திறப்பு

இந்தநிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பெயர் பலகை வைக்கப்பட்டது. இந்த பெயர் பலகையை நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர்.

இதைத்தொடர்ந்து நடிகர் விவேக்கை நினைவு கூரும் விதமாக பள்ளி மாணவர்கள் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒரு லட்சம் முகாம்

சின்னக்கலைவாணர் பத்மஸ்ரீ விவேக் எனது நீண்டகால நண்பர். கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி சைதாப்பேட்டையில் பசுமை சைதை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் 2 ஆயிரமாவது மரக்கன்று நடும் நிகழ்வில் நடிகர் விவேக் கலந்துகொண்டு மரம் நட்டு பாராட்டி பேசினார். பசுமை சைதை திட்டத்தின்கீழ் இதுவரை 98 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு லட்சமாவது மரக்கன்றை நடும்போது அந்த மரக்கன்றுக்கு நடிகர் விவேக் என பெயர் வைக்கப்படும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் விவேக் மீது மிகுந்த பற்றும், பாசமும் கொண்டவர். நடிகர் விவேக் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, நிறைய வழிமுறைகள் இருந்தும், அதை முதலில் நிறைவேற்றி உள்ளார். தடுப்பூசி செலுத்தி கொண்டதால் தமிழ்நாட்டில் 88 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருக்கிறது.

நடிகர் விவேக் இறுதிவரை நலமுடன், திடமுடன், சுகாதாரத்துடன் வாழ வேண்டும் என்று அனைவரையும் அறிவுறுத்தியுள்ளார். எனவே இதுவரை முதல் தவணை, 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தாத 2 கோடி பேரும், வருகிற 8-ந்தேதி இந்தியாவிலேயே முதல் முறையாக நடைபெறும் ஒரு லட்சம் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ., மாமன்ற கணக்குக்குழு தலைவர் க.தனசேகரன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தலைவர் பூச்சிமுருகன் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் நடிகர் விவேக்கின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story