விசாரணை கைதி தங்கமணி உயிரிழப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம்
திருவண்ணாமலை விசாரணை கைதி தங்கமணி உயிரிழப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்தார்.
சென்னை,
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. சாராயம் பதுக்கி வைத்திருந்ததாக திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கடந்த 26ந்தேதி தங்கமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தங்கமணி உடல்நிலை பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்ததார்.
இந்த சம்பவம் சட்டசபை கூட்ட தொடரில் எதிரொலித்தது. சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் போர்கொடி தூக்கினர்.
இந்த வழக்கு சம்பந்தமாக திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜன், பெண் இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி, ஜெயசந்திரன், ஜெயக்குமார் உட்பட 4 போலீசாரை காத்திருப்போர் பட்டியலுக்கு ஐ.ஜி பிரேம் ஆனந்த் சின்கா மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் விசாரணை கைதி தங்கமணி இறந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சிபிசிஐடி விசாரணைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், திருவண்ணாமலை விசாரணை கைதி தங்கமணி உயிரிழப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,
கடந்த 29ஆம் தேதி திருவண்ணாமலை சம்பவம் தொடர்பாக, உடல் கூராய்வுக்கு பிறகு அறிக்கை தர உள்ளேன் என்று கூறியிருந்தேன். தங்கமணியின் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது. சிபிசிஐடியின் அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story