பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் காலை 9 மணிக்கு தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் - தேர்வுத்துறை அறிவிப்பு
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
சென்னை,
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. வரும் 28-ந் தேதி வரை நடக்க இருக்கிறது. தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு 3,119 மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வினை 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர் எழுதுகிறார்கள். இதில், மாணவர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 பேரும் அடங்குவார்கள்.
தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாமல் இருக்க ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் செல்போன் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஷூ, பெல்ட் அணிந்து வரவும் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வின்போது, தேர்வு எழுதுபவர்கள் ஆட்சேபனைக்குரிய பொருட்களை வைத்திருந்து பயன்படுத்தி இருந்தால், அன்றைய தேர்வு ரத்து செய்யப்படுவதுடன், அடுத்த ஓராண்டு, அதாவது இரு பருவத் தேர்வுகள் எழுத தடை விதிக்கப்படும் எனவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் காலை 9 மணிக்கு தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“நாளை (மே-5) தொடங்கவுள்ள பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் காலை 9 மணிக்கு தேர்வு மையங்களுக்கு வர வேண்டும். காலை 8-மணிக்கே வரவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 9 மணிக்கு வந்தால் போதும்.
பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்-2 மாணவர்கள் காலை 9.45 மணிக்கு தேர்வு அறைக்குள் செல்ல வேண்டும். காலை 10 மணி முதல் 10.10 மணி வரை மாணவர்கள் வினாத்தாளை படிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 10.15 முதல் பிற்பகல் 1.15 மணிவரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெறும்” என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story