தருமபுர பட்டின பிரவேச விவகாரம்; அரசியல் செய்ய பார்க்கிறார்கள், அரசு சுமூக தீர்வு காணும் - அமைச்சர் சேகர்பாபு


தருமபுர பட்டின பிரவேச  விவகாரம்; அரசியல் செய்ய பார்க்கிறார்கள், அரசு சுமூக தீர்வு காணும் - அமைச்சர் சேகர்பாபு
x
தினத்தந்தி 4 May 2022 11:41 AM IST (Updated: 4 May 2022 11:41 AM IST)
t-max-icont-min-icon

தருமபுர பட்டின பிரவேச விவகாரத்தில் தமிழக அரசு நடுநிலையோடு செயல்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை,

மயிலாடுதுறை மாவட்டத்தில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்திருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று `பட்டினப் பிரவேசம்' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம். மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப் பிரவேசம் பல்லக்குத் தூக்கும் நிகழ்வுக்குத் திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேச நிகழ்வானது இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடைவிதித்து மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருந்தார்.  தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பின. 

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில், அதிமுக இவ்விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தருமபுர ஆதின மட பட்டினப்பிரவேச நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என பக்தர்கள் விரும்புகின்றனர். பல்லக்கு நிகழ்ச்சியில் மரியாதை குறைவு என எதுவும் கிடையாது ” என்றார் . பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசுகையில்,  தருமபுர பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை ஏற்றுக்கொள்ள முடியாது: பிரவேசத்தை நடத்த வேண்டும்”என்றார். 

இதையடுத்து, இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது: தருமபுரம் விவகாரம் குறித்து ஆதீனங்களுடன் பேசி அரசு சுமூக தீர்வு காணும். தருமபுரம் விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார்கள்  தருமபுர பட்டின பிரவேச விவகாரத்தில் தமிழக அரசு நடுநிலையோடு செயல்படும். ஆதீனங்களை அழைத்து ஆலோசனை பெற்றவர் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின்” என்றார்.


Next Story