கீழையூரில் ஜல்லிக்கட்டு போட்டி - 694 காளைகள் பங்கேற்பு...!
கீழையூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 694 காளைகள் பங்கேற்றனர்.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கீழையூர் கிராமத்தில் வடபத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஊரின் வீரபிள்ளை ஏரி திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.
அரசு அனுமதியுடன் நடைபெற்ற இப்போட்டியை அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா, அரியலூர் கோட்டாட்சியர் ஏழுமலை ஆகியோர் கலந்துகொண்டு காலை 8.00 மணி அளவில் போட்டியை துவங்கி வைத்தனர். முதலில் கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு இனிதே துவங்கியது.
வீரர்கள் கலத்தில் முன்பே உறுதிமொழி எடுத்துக்கொண்டு காளைகளை அடக்க துவங்கினர். இதில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. சீறி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்க முயன்றனர். இதில் பல காளைகள் மாடுபிடி வீரர்களால் அடக்கப்பட்டது. சில காளைகள் வீரர்களை அருகில் கூட நெருங்க விடாமல் ஆக்ரோசமாக சீறிப்பாய்ந்தன.
அதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் வெற்றி பெற்ற காளைகளுக்கும் அண்டா, குடம், சோபா, மின்விசிரி,தங்க காசு, வெள்ளிக்காசு மற்றும் ரொக்கம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது. சில மாட்டின் உரிமையாளர்கள் தங்கள் மாட்டை பிடித்தால் தங்கம், வெள்ளி, மற்றும் ரொக்கம் ஆகியவற்றையும் பரிசாக வழங்குவதாக அறிவித்திருந்தனர். அப்படி அறிவிக்கப்பட்ட மாடுகளை பிடித்தவர்களுக்கு விழாக்குழுவினரிடம் இருந்து கொடுக்கப்பட்ட பரிசு மட்டுமின்றி மாட்டின் உரிமையாளர் அறிவித்த பரிசுகளையும் வாங்கி வழங்கினர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 694 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
மேலும் போட்டியின் போது காளைகள் முட்டியதில் மொத்தம் 38 பேர் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்களுக்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
காலை 8 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்ட இப்போட்டி மதியம் 3 மணி அளவில் அனைத்து மாடுகளும் அவிழ்த்து விடப்பட்டு இனிதே நிறைவுற்றது.
இந்த ஜல்லிக்கட்டில் அரியலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், தலைமையில் கீழப்பழுவூர் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு மேற்பார்வையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story