ஜூன் முதல் வாரத்தில் புதுச்சேரியில் தொழில்முனைவோர் மாநாடு அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
ஜூன் மாதம் முதல் வாரத்தில் புதுச்சேரியில் தொழில்முனைவோர் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
புதுச்சேரி
ஜூன் மாதம் முதல் வாரத்தில் புதுச்சேரியில் தொழில்முனைவோர் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
சலுகைகள்
புதுச்சேரியில் தொழில் வளத்தை பெருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதிய தொழிற்கொள்கையை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளிலும் இறங்கி உள்ளது.
புதிதாக தொழில் தொடங்க முன் வருபவர்களுக்கு சலுகைகள் அளிப்பது தொடர்பாக அடுத்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று சமீபத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தொழில் முனைவோர் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். புதிய தொழில் தொடங்க முன்வருவோருக்கு ஒற்றை சாளர முறையில் அனுமதி அளிக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.
சமீபத்தில் பிரெஞ்சு நாட்டின் பிரதிநிதிகள் சிலர் புதுச்சேரி வந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி, உள்துறை மற்றும் தொழில்துறை அமைச்சரான நமச்சிவாயம் ஆகியோரை சந்தித்து பேசினர்.
இந்தநிலையில் புதுச்சேரியில் தொழில் முனைவோர் மாநாடு நடத்துவது குறித்து அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-
மாசு இல்லாத தொழில்
புதுவையில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்க கரசூர் பகுதியில் சுமார் 800 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக அந்த இடம் எந்தவித பயன்பாடும் இன்றி உள்ளது.
இங்கு புதிய தொழிற்சாலைகள் தொடங்க அனுமதிகேட்டு மத்திய அரசுக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. ஜூன் முதல் வாரத்தில் புதுவையில் தொழில்முனைவோர் மாநாட்டை நடத்த உள்ளோம்.
குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், ஆட்டோ மொபைல், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளோம். சுற்றுச்சூழலுக்கு எந்தவித மாசும் ஏற்படுத்தாத தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். புதிய தொழிற்சாலைகள் வரும்போது ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
Related Tags :
Next Story