மதுகுடிக்க பணம் தர மறுத்த மருந்துக்கடை உரிமையாளர் அடித்துக்கொலை; 4 பேர் கைது
பெரம்பலூர் அருகே மதுகுடிக்க பணம் தர மறுத்த மருந்துக்கடை உரிமையாளர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்,
பணம் கேட்டு மிரட்டல்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர்.புதுப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 44). இவர் பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தில் உள்ள சிவன் கோவில் தெருவில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வந்து உள்ளார். மேலும், அதே ஊரில் மருந்துக்கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு மணிமேகலை (38) என்ற மனைவியும், கனிஷ் (14) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் அதே ஊரில் உள்ள அம்பேத்கர் தெருவை சேர்ந்த எழுத்தாணி என்கிற பிரபாகரன், ரகு என்கிற ரகுநாத் மற்றும் அவர்களது நண்பர்கள் சிலர் நேற்று இரவு நாகராஜன் மருந்துக்கடைக்கு சென்று மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
அடித்துக்கொலை
நாகராஜன் பணம் தர மறுத்ததால் அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. அதன் பின்பு வீட்டிற்கு வந்த நாகராஜன் சிறிது நேரம் கழித்து தான் தாக்கப்பட்ட சம்பவத்தை மனைவியிடம் கூறினார். பின்னர் மயக்கமாக இருப்பதாக தெரிவித்தார். உடனே அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்து சென்று உள்ளனர்.
இதற்கிடையே சுயநினைவை இழந்த அவரை பரிசோதித்த டாக்டர்கள் நாகராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
4 பேர் கைது
இந்த சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், நாகராஜனை அடித்துக்கொலை செய்த பிரபாகரன் (29), ரகுநாத் (23), கார்த்திக் (24), சுரேஷ் (24) ஆகிய 4 பேரை பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அஜீத்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மதுகுடிக்க பணம் தர மறுத்த மருந்துக்கடை உரிமையாளர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story