சென்னை போலீஸ் கமிஷனரிடம் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை


சென்னை போலீஸ் கமிஷனரிடம் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை
x
தினத்தந்தி 4 May 2022 9:28 PM GMT (Updated: 2022-05-05T02:58:25+05:30)

விசாரணை கைதி உயிரிழப்பு, ஐ.ஐ.டி. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் நேற்று விசாரணை நடத்தினார்.

சென்னை,

சென்னை புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் அருகே தலைமை செயலக காலனி போலீசார் கடந்த 18-ந் தேதி அன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஆட்டோவில் கஞ்சா, ஆயுதங்களுடன் வந்த திருவல்லிக்கேணியை சேர்ந்த பெயிண்டர் சுரேஷ் (வயது 28), மெரினா கடற்கரையில் குதிரை ஓட்டும் வேலைபார்த்த விக்னேஷ் (25) ஆகிய 2 பேரை பிடித்தனர். அப்போது விக்னேஷ் தப்பி செல்ல முயன்றதால் அவரை விரட்டி சென்று போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையின்போது அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 3 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை நடக்கிறது. விக்னேஷ் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலும் அவரது உறவினர்கள் புகார் அளித்திருந்தனர்.

இதே போன்று சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த 2017-ம் ஆண்டு ஆராய்ச்சி படிப்பு படித்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தொடர்பாகவும் தேசிய தாழ்த்தப்பட்டடோர் ஆணையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டிருந்தது.

துணை தலைவர் விசாரணை

இந்த நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் அருண் ஹால்டர் நேற்று சென்னை வருகை தந்தார். சேப்பாக்கத்தில் உள்ள தமிழக அரசின் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்து இந்த 2 சம்பவங்கள் தொடர்பான விசாரணையை தொடங்கினார். அங்கு அவர் முன்பு, சென்னை போலீஸ் சங்கர் ஜிவால், மாநில மனித உரிமைத்துறை கூடுதல் டி.ஜி.பி. செந்தாமரை கண்ணன், கூடுதல் கமிஷனர் கண்ணன் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று காலை 11.30 மணி அளவில் ஆஜராகினர்.

இந்த விசாரணையின்போது, கைதி விக்னேஷ் மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சென்னை தலைமை செயலக காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர், ஊர்காவல் படை வீரர் ஆகிய 3 பேர் மீது ‘சஸ்பெண்டு’ நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று கமிஷனர் சங்கர் ஜிவால் விளக்கம் அளித்து, அது தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பித்தார்.

தலைமை செயலக காலனி போலீஸ் நிலையத்தில்...

சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் உள்ளது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் மேற்கு வங்காளம் சென்று பிடித்தனர். ஆனால் அவர் கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றிருக்கிறார். அந்த முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வகையில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உறுதி அளித்ததாகவும் தெரிகிறது.

உயிரிழந்த கைதி விக்னேஷின் உறவினர்களும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் அருண் ஹால்டர் முன்பு ஆஜராகி, விக்னேஷ் உயிரிழப்பை மூடி மறைக்க போலீசார் தரப்பில் ரூ.1 லட்சம் தரப்பட்ட தகவலை தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அவர், விக்னேஷிடம் விசாரணை நடைபெற்ற சென்னை தலைமை செயலக காலனி போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்றார். அங்கு அவர், போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். கைதிகள் அடைக்கப்படும் அறை எங்கே? விசாரணை கைதிகளை கொடூரமாக அடிப்பீர்களா? என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

பின்னர் அவர், சென்னை ஐ.ஐ.டி.க்கு நேரில் சென்று மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து இயக்குனர், பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது பாதிக்கப்பட்ட மாணவி அவர் முன்பு ஆஜராகி, தனக்கு நேர்ந்த கொடுமைகளை வாக்குமூலமாக அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விசாரணை விவரங்களை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளார்.

Next Story