தி.மு.க.வை ஆன்மிகத்துக்கு எதிராக இருப்பதுபோல் காட்ட முயற்சி: சட்டசபையில் முதல்-அமைச்சர் குற்றச்சாட்டு


தி.மு.க.வை ஆன்மிகத்துக்கு எதிராக இருப்பதுபோல் காட்ட முயற்சி: சட்டசபையில் முதல்-அமைச்சர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 5 May 2022 5:22 AM IST (Updated: 5 May 2022 5:22 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க.வை ஆன்மிகத்துக்கு எதிராக இருப்பதுபோல் காட்ட முயற்சி நடப்பதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி பேசினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று இந்து சமய அறநிலையத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தை தொடங்கிவைத்து அ.தி.மு.க. உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் (நத்தம் தொகுதி) பேசியதாவது:-

பொற்காலம்

இந்து சமய அறநிலையத் துறை மற்ற துறைகளைவிட முக்கியமானது. சிறப்பு வாய்ந்த இந்த துறை, புனிதமான துறை ஆகும். 1959-ம் ஆண்டு இந்து சமய அறக்கட்டளைகள் சட்டம் அடிப்படையில், இந்த துறை உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அ.தி.மு.க. ஆட்சி காலம்தான் இந்து சமய அறநிலையத் துறையின் பொற்காலம் ஆகும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஆன்மிக நம்பிக்கை கொண்டிருந்ததால், இந்த துறையில் சிறப்பான திட்டங்களை கொண்டு வந்தார்.

அன்னதான திட்டம்

பசிப்பிணியை போக்க திருக்கோவில்களில் அன்னதான திட்டத்தை கொண்டு வந்தார். 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் அதன்பிறகு விரிவுபடுத்தப்பட்டது. பொதுவாக, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை முடக்குவீர்கள் அல்லது ரத்து செய்வீர்கள். ஆனால், அன்னதான திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் 11 ஆயிரம் கோவில்களில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடத்தப்பட்டுள்ளது. கோவில் திருப்பணிகளுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டதை, ரூ.50 ஆயிரமாகவும், ரூ.1 லட்சமாகவும் உயர்த்தி வழங்கியது அ.தி.மு.க. ஆட்சியில்தான்.

இவ்வாறு அவர் பேசிக் கொண்டிருந்தபோது, அவை முன்னவர் துரைமுருகன் குறுக்கிட்டு பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

ரூ.2 லட்சமாக உயர்வு

அவை முன்னவர் துரைமுருகன்:- அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தி.மு.க. ஆட்சியில் மாற்றியதாக உறுப்பினர் இங்கே சொல்கிறார். தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத்தான் அ.தி.மு.க. ஆட்சியில் மாற்றினீர்கள்.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு:- உறுப்பினர் 2 முறை இந்த அரசுக்கு நன்றி கூறினார். அவர் பேசி முடிப்பதற்குள் 10 முறையாவது நன்றி சொல்வார் என எதிர்பார்க்கிறேன். கோவில் திருப்பணிகளுக்கு அ.தி.மு.க. ஆட்சியில், ஒவ்வொரு கோவிலுக்கும் ரூ.1 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டதாக உறுப்பினர் குறிப்பிட்டார். அது தற்போது ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுவும் இப்போது இந்த நிதி 1250 கோவில்களுக்கு வழங்கப்படுகிறது.

ரூ.1 லட்சத்துக்குத்தான் சமம்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி:- எங்கள் கட்சியின் உறுப்பினர் கருத்தை பதிவு செய்ய அவருக்கு உரிமை உள்ளது. கோவில் திருப்பணிகளுக்கு வழங்கும் தொகை தற்போது ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக சொல்கிறீர்கள். இப்போது, கட்டுமான பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. எனவே, ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டிருந்தாலும், கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட ரூ.1 லட்சத்துக்குத்தான் அது சமம்.

அமைச்சர் சேகர்பாபு:- கோவில் திருப்பணிகளுக்கு நீங்கள் ரூ.1 லட்சம் வழங்கியபோது கம்பி விலை ரூ.20 ஆயிரமாக இருந்தது. அதன்பிறகு அந்த விலை ரூ.40 ஆயிரமாக உயர்ந்தபோதும், நீங்கள் அதே ரூ.1 லட்சத்தைத்தான் வழங்கினீர்கள்.

ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்

உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன்:- கோவில் திருப்பணிகளுக்கு வழங்கும் நிதி யானை பசிக்கு சோளப் பொறியாகும். கடலில் கரைத்த பெருங்காயம் போல் உள்ளது. எனவே, அந்தத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். கோவில்களில் உள்ள திருக்குளப் பணிகளையும், திருத்தேர் பணிகளையும் செய்தது அ.தி.மு.க. அரசுதான். அதை நீங்களும் தொடருகிறீர்கள்.

மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மதச்சார்பற்ற அரசாக இருக்க வேண்டும். அனைத்து மதத்தையும் சமமாக பார்க்க வேண்டும். முதல்-அமைச்சர், கடவுள் இல்லை என்று மறுப்பவரா?.

சொந்த விருப்பம்

சபாநாயகர் அப்பாவு:- அது ஒவ்வொருவரின் சொந்த விருப்பம்.

உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன்:- முதல்-அமைச்சர், ஆன்மிகவாதியா?.

அமைச்சர் எ.வ.வேலு:- அவரது தனிப்பட்ட சுதந்திரம் அது. இந்துக்களால் நேசிக்கப்படும் தலைவராக அவர் உள்ளார். மடாதிபதி தலைவர்கள் எல்லாம் ஒன்றுகூடி, முதல்-அமைச்சரை சந்தித்து பேசினார்கள். பின்னர் அவர்கள், தமிழகத்தில் ஆன்மிக ஆட்சி நடக்கிறது என்று கூறினார்கள். எல்லா மதத்துக்கும் சொந்தக்காரர். உங்களது சொந்தக் கருத்தை நீங்கள் கேட்கிறீர்கள்.

மதசார்பற்ற கூட்டணி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- அ.தி.மு.க. உறுப்பினர் இங்கே முதல்-அமைச்சர் விளக்கம் சொல்ல வேண்டும் என்கிறார். எங்கள் கூட்டணியின் பெயரே மதசார்பற்ற கூட்டணிதான்.

(தொடர்ந்து உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் அதே கருத்தை வலியுறுத்தி பேசினார்)

அமைச்சர் பி.கே.சேகர்பாபு:- தனிப்பட்ட ஒருவருடைய விருப்பத்தை சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. எம்மதமும் சம்மதம் என முதல்-அமைச்சர் செயல்படுகிறார். இதுவரை, இந்துக்களை பற்றி எந்தக் கருத்தையும் தவறாகச் சொல்லவில்லை. மதத்தை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்கள் போல் உங்கள் பேச்சு உள்ளது.

அரசின் கொள்கை முடிவு

(இந்த நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து ஒரு கருத்தை பதிவு செய்தார். அது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது)

சபாநாயகர் அப்பாவு:- ஒரு அரசின் கொள்கை முடிவை தெளிவாக கூறிவிட்டார்.

எடப்பாடி பழனிசாமி:- நாங்கள் மதங்களுக்கு எதிராக பேசவில்லை. முதல்-அமைச்சர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர். எல்லா மத விழாவுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் முதல்-அமைச்சர் ஏன், தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை?.

ஆன்மிகத்துக்கு எதிரான கட்சியா?

உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன்:- மதசார்பற்ற கூட்டணி என்று பெயர் வைத்தால் மட்டும் போதாது, நடைமுறையில் இருக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- இன்றைக்கு திட்டமிட்டே ஒருசிலர் தி.மு.க.வை ஆன்மிகத்துக்கு எதிராக இருப்பதுபோல் காட்ட முயற்சி செய்கிறார்கள். இது பெரியார் ஆட்சி, அண்ணா ஆட்சி, தலைவர் கருணாநிதி ஆட்சி. ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், இதுதான் திராவிட மாடல் ஆட்சி. யாருக்கும் நாங்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டோம்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்சொல்வம்:- விவாதம் எதையோ நோக்கிச் செல்கிறது. பேரறிஞர் அண்ணா, ஒன்றே குலம், ஒருவனே தேவன் என சொன்னார். எனவே, எம்மதமும் சம்மதம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story