நெமிலி அருகே ரூ.5 கோடி மதிப்பு நெல் மூட்டைகள் வீணாகும் அபாயம் - விவசாயிகள் கவலை...!


நெமிலி அருகே ரூ.5 கோடி மதிப்பு நெல் மூட்டைகள் வீணாகும் அபாயம் - விவசாயிகள் கவலை...!
x
தினத்தந்தி 5 May 2022 4:38 AM GMT (Updated: 5 May 2022 4:38 AM GMT)

நெமிலி அருகே ரூ.5 கோடி மதிப்பு நெல் மூட்டைகள் வீணாகும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.

நெமிலி, 

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த உளியநல்லூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு அனுமதி கிடைத்தும் வேளாண் அதிகாரிகள் பணியை துவங்காததால் 5 கோடி மதிப்பிலான 30,000 மூட்டை நெல் மழையில் நனைந்து வீணாகும் அபாயம் எழுந்துள்ளது. உளியநல்லூர், வேப்பேரி, துறையூர் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது. 

இந்த நிலையில் கடந்த பருவத்தில் பயிரிடப்பட்டிருந்த 5 கோடி மதிப்புள்ள 30,000 நெல் மூட்டைகளை விற்பனை செய்ய விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையத்திற்கு முன்பு கொண்டு வந்து குவித்துள்ளனர். ஆனால் 2 மாதங்களாக நெல் கொள்முதல் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. 

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கியும், வேளாண் அதிகாரிகள் பணிகளை தொடங்காமல் அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் நெல் மழையில் நனைந்து முளைத்து, வீணாகும் அபாயம் எழுந்துள்ளது. 

இதனால் வேறு வழியின்றி குறைந்த விலைக்கு தனியாருக்கு நெல் மூட்டைகளை விற்பனை செய்யும் சூழல் எழுந்துள்ளதால் விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். எனவே இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து நெல் கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story