செஸ் ஒலிம்பியாட் விழாவுக்கு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு..!
44-வது செஸ் ஒலிம்பியாட் விழாவில் கலைநிகழ்ச்சிகள் நடத்த தமிழ்நாடு அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை,
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அணிகள் கலந்து கொள்கின்றன.
இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. இதில், பொதுத்துறை அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் இடம் பெற்றனர். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 23 பேர் இடம் பெற்றிருந்தனர். இதனைத்தொடர்ந்து, சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தமிழக அரசால் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
போட்டியை நடத்தும் நாடு என்பதால் இந்தியா சார்பில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 2 அணிகள் களம் இறங்குகின்றன. இந்திய ‘பி’ அணிகளில் இளம் வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கம் மற்றும் நிறைவு விழாவை நடத்த தமிழ்நாடு அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, ரூ.92.13 கோடி நிதி ஒதுக்கிய நிலையில், விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்த ரூ.8 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மேலும் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான முழு செலவையும் அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story