கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு...!
கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் வடமாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
கோத்தகிரி,
கொல்கத்தாவை சேர்ந்த 40 கூலித் தொழிலாளிகள் பெருந்துறை பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த செவ்வாய்கிழமை மதியம் பெருந்துறை பகுதியில் இருந்து 2 வாடகை சுற்றுலா வேன்கள் மூலம் சுற்றுலா சென்றுள்ளனர்.
அவர்கள் சுற்றுலாத் தலங்களைக் கண்டு களித்து விட்டு, நேற்று இரவு 9.30 மணிக்கு பெருந்துறைக்கு திரும்பிச் செல்வதற்காக கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக வேனில் சென்றுள்ளனர். சுற்றுலா வேன் மாமரம் கிராமம் அருகில் சென்று கொண்டிருக்கும்போது வளைவு ஒன்றில் வேனைத் திருப்ப டிரைவர் முயற்சி செய்தபோது அவரது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் இருந்த தடுப்புச் சுவர் மீது பலமாக மோதி கவிழ்ந்தது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேனுக்குள் இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த இம்ரான் நாசர் (18) என்பவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் டிரைவர் உள்பட படுகாயமடைந்த 5 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். இது குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story