பாகுபலி யானையுடன் நேருக்குநேர் மல்லுகட்டிய நாய்க்குட்டி


பாகுபலி யானையுடன் நேருக்குநேர் மல்லுகட்டிய நாய்க்குட்டி
x
தினத்தந்தி 5 May 2022 4:51 PM IST (Updated: 5 May 2022 4:51 PM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம் அருகே கிராமத்திற்குள் புகுந்த பாகுபலி யானையை நாய்க்குட்டி ஒன்று துணிச்சலுடன் விரட்ட முயன்றது.

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சமயபுரம் பகுதியில், பாகுபலி என்று பெயரிடப்பட்ட யானை ஒன்று இரவு நேரத்தில் சாலையைக் கடந்து ஊருக்குள் புகுந்தது. இரவு நேரம் என்பதால் சாலையில் அதிக அளவில் மக்கள் நடமாட்டம் எதுவும் இல்லை. 

இந்த நிலையில் அங்கிருந்த குட்டி நாய் ஒன்று, பாகுபலி யானையை விடாது விரட்டி தனது எதிர்ப்பைக் காட்டியதுடன், யானை ஊருக்குள் புகுந்ததை கிராம மக்களுக்குத் தெரிவிக்க தொடர்ந்து குரைத்துக் கொண்டே சென்றது. இந்த சத்தம் கேட்டு வெளியே வந்த பொதுமக்கள், பாகுபலி யானை ஊருக்குள் புகுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பாகுபலி யானையும் பிளிறிக் கொண்டே நாயை பயமுறுத்த முயன்றது. ஆனால் எதற்கும் அஞ்சாத அந்த நாய்க்குட்டி, அந்த பகுதியை விட்டு யானை செல்லும் வரை அதைப் பார்த்து குரைத்துக் கொண்டே இருந்தது. யானையின் முழங்கால் அளவு கூட இல்லாத குட்டி நாய் ஒன்று, துணிச்சலுடன் யானையை எதிர்கொண்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Next Story