14 ஆயிரத்து 627 மாணவ மாணவிகள் எழுதினர் புதுவை காரைக்காலில் பிளஸ் 2 தேர்வு தொடங்கியது தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக கருத்து
புதுவை, காரைக்காலில் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது. 14 ஆயிரத்து 627 மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
புதுச்சேரி
புதுவை, காரைக்காலில் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது. 14 ஆயிரத்து 627 மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஆன்லைன் வகுப்புகள்
உலகையே மிரட்டிய கொரோனா இந்தியாவுக்குள்ளும் புகுந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் அனைத்து துறைகளும் ஸ்தம்பித்தன. அதிலும் நிலையற்ற தன்மையால் பள்ளிகள் மூடப்படுவதும் திறக்கப்படுவதுமாக இருந்து மாணவர்களின் படிப்பு கடந்த 2 ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கி பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன.
அதேநேரத்தில் பள்ளி இறுதி மற்றும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டனர். பள்ளிகளில் அவ்வப்போது நடத்தப்படும் தேர்வுகள் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
இந்தநிலை தொடர்ந்தபோதிலும் நேரடி வகுப்புகள் போல் பாடங்களை கவனிக்க முடியவில்லை என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
நேரடி வகுப்புகள்
இந்தநிலையில் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டதாலும் கொரோனா பரவல் குறைந்ததாலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதற்கேற்ப பாட திட்டங்கள் குறைக்கப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
இதையொட்டி எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்பதில் அரசு முனைப்பாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. முன்னதாக செய்முறை தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
புதுவை மாநிலத்தை பொறுத்தவரை 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பிளஸ்-2 தேர்வு
இந்தநிலையில் ஏற்கனவே அரசு திட்டமிட்டிருந்தபடி பிளஸ்-2 தேர்வுகள் தொடங்கின. கொரோனாவால் எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வை சந்திக்காத மாணவர்கள் முதல் முறையாக பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதினார்கள்.
தேர்வு தொடங்கியதையொட்டி மாணவ, மாணவிகள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வந்து தேர்வுக்கூடத்துக்கு வந்தனர். பதுவை, காரைக்காலில் மொத்தம் 38 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
புதுவை, காரைக்காலை சேர்ந்த 6 ஆயிரத்து 972 மாணவர்கள், 7 ஆயிரத்து 655 மாணவிகள் என 14 ஆயிரத்து 627 பேர் தேர்வு எழுதினார்கள். தேர்வின்போது முறைகேடுகளில் ஈடுபடாமல் தடுக்க பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு இருந்தது. அதிரடியாக அவர்கள் தேர்வு மையங்களில் ஆய்வை மேற்கொண்டனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடக்கம்
இதற்கிடையே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகின்றன. இந்த தேர்வை 8 ஆயிரத்து 530 மாணவர்கள், 8 ஆயிரத்து 272 மாணவிகள் என 16 ஆயிரத்து 802 பேர் எழுதுகின்றனர்.
மாணவர்கள் தேர்வெழுத வசதியாக 48 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களை கண்காணிக்க 9 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பிளஸ்-1 மாணவர்களுக்கு வருகிற 10-ந்தேதி தேர்வு தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் 38 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
------
Related Tags :
Next Story