கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு செப்டம்பர் மாதம் நிறைவடையும் - தொல்லியல்துறை தகவல்


கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு செப்டம்பர் மாதம் நிறைவடையும் - தொல்லியல்துறை தகவல்
x
தினத்தந்தி 5 May 2022 10:02 PM IST (Updated: 5 May 2022 10:02 PM IST)
t-max-icont-min-icon

கீழடியில் நடைபெற்று வரும் 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் வரும் செப்டம்பர் மாதம் நிறைவு பெறும் என தொல்லியல் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை அங்கு 7 கட்ட அகழாய்வுகள் நடந்து முடிந்துள்ளன. இதில் பானைகள், முதுமக்கள் தாழிகள், ஆபரண பொருட்கள் உள்பட பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய நூற்றுக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 

இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது. இதற்காக 5 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தொல்லியல் துறையின் கொள்கை விளக்க குறிப்பில், கீழடியில் நடைபெற்று வரும் 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் வரும் செப்டம்பர் மாதம் நிறைவு பெறும் என கூறப்பட்டுள்ளது. 

அதே போல் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட அகழாய்வு, வெம்பக்கோட்டை மற்றும் துலுக்கர்பட்டியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளும் வரும் செப்டம்பர் 30-ந்தேதிக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சங்க கால கொற்கை துறைமுகத்தின் கடலோரத்தில் முன்கள ஆய்வுப்பணிகள் ஓரிரு தினங்களில் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Next Story