அறந்தாங்கியில் பரபரப்பு: பிரியாணி சாப்பிட்ட மாணவர்கள் உள்பட 27 பேருக்கு வாந்தி-மயக்கம் கடைக்கு அதிகாரிகள் `சீல்' வைத்தனர்
அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட மாணவர்கள் உள்பட 27 பேருக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது. மேலும் பிரியாணி கடைக்கு அதிகாரிகள் `சீல்' வைத்தனர்.
அறந்தாங்கி:
வாந்தி-மயக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி செந்தமிழ் நகரை சேர்ந்தவர் சித்திரைவேலு. இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த கட்டிட வேலைக்கு நேற்று முன்தினம் 40 தொழிலாளர்கள் வந்து உள்ளனர். இவர்கள் சாப்பிடுவதற்காக அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த வினோத் (வயது 42) என்பவர் அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் உள்ள பிரியாணி கடையில் 40 பிரியாணி பார்சல்களை வாங்கி வந்தார். பின்னர் சித்திரைவேலு 40 பேருக்கும் பிரியாணி பார்சல்களை வழங்கினார்.
இதனை அனைவரும் வேலை முடிந்து வீட்டிற்கு பிரியாணி பார்சல்களை கொண்டு சென்று வீட்டில் உள்ளவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது.
27 பேர் சிகிச்சை
இதையடுத்து வாந்தி-மயக்கம் ஏற்பட்ட அறந்தாங்கியை சேர்ந்த செல்வராணி (55), கனிமொழி (25), காயத்ரி (45), இவரது மகள்கள் பவதாரணி (13), நித்யஸ்ரீ (8), பழனிவேல் (40), சந்திரா (25), கண்ணையா (47), ஆனந்தன் (43), தங்கராஜ் (43), சபரிநாதன் (21), வசந்தி (45), இவரது மகன் ஹரிசுதன் (17), செல்வம் (45), இந்திராணி (45), பிரியா (31), விஜயா (48), இவரது மகள் காயத்ரி (20), மகன் ஹரிஹரன் (14), சிதம்பரம் (57), ராஜா மகள் அபிநயா (17), சுப்பிரமணியன் மகன் பார்த்திபன் (17) உள்பட 27 பேர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மேல்சிகிச்சைக்காக கனிமொழி மட்டும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அறந்தாங்கி கோட்டாட்சியர் சொர்ணராஜ், இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், நகராட்சி தலைவர் ஆனந்த், துணைத்தலைவர் முத்து ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். இதில் பவதாரணி 8-ம் வகுப்பும், நித்யஸ்ரீ 2 வகுப்பும், ஹரிசுதன் 12-ம் வகுப்பும், ஹரிஹரன் 9-ம் வகுப்பும், அபிநயா, பார்த்திபன் ஆகியோர் 12-ம் வகுப்பும் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
கடைக்கு `சீல்’
பிரியாணி சாப்பிட்டு வாந்தி-மயக்கம் ஏற்பட காரணமாக இருந்த பிரியாணி கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஜேம்ஸ் மற்றும் அதிகாரிகள் அறந்தாங்கி போலீசார் முன்னிலையில் `சீல்' வைத்தார். இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியாணி சாப்பிட்டு 27 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story