‘கிரிப்டோ கரன்சி’யில் ரூ.1½ கோடி பறிகொடுத்த சென்னை போலீசார் - பரபரப்பு தகவல்..!


‘கிரிப்டோ கரன்சி’யில் ரூ.1½ கோடி பறிகொடுத்த சென்னை போலீசார் - பரபரப்பு தகவல்..!
x
தினத்தந்தி 6 May 2022 2:27 AM IST (Updated: 6 May 2022 6:07 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் சமூக வலைத்தள போலி விளம்பரங்களை நம்பி ‘கிரிப்டோ கரன்சி’யில் ரூ.1½ கோடியை போலீசார் இழந்துள்ளனர். இதனை வேதனையுடன் சுட்டிக்காட்டி சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் போலீசாருக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

சென்னை,

கடந்த 10.9.2021- அன்று போலீசார் ஒருவர் ‘ஆன்லைன் ரம்மி’ சூதாட்டத்தில் தனது சேமிப்புகளை இழந்ததால் தன்னுடைய இன்னுயிரை நீத்தார். அப்போது இது போன்ற தீய பழக்கங்களில் போலீசார் ஈடுபட கூடாது என்று அறிவுறுத்தி இருந்தேன். அதனை நீங்கள் கடைப்பிடித்து வருவீர்கள் என்று நம்புகிறேன்.

தற்போது ‘கிரிப்டோ கரன்சி’ மற்றும் அதனை சார்ந்த பணமதிப்பு முதலீடுகளில் தங்களது சேமிப்பு பணத்தை முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்று சமூக வலைத்தளங்களில் அதிகளவில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. இதனை நம்பி சில போலீசார் பணம் மற்றும் சேமிப்பை இழந்து இன்னுயிரை மாய்த்து கொள்ளக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களது குடும்பத்தினர் ஆதரவற்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ரூ.1½ கோடி பணம் இழப்பு

உதாரணமாக, நமது போலீஸ்துறையில் பணியாற்றும் 2 போலீசார் மற்றும் அவர்களை சார்ந்த நபர்கள் சமூக வலைத்தளங்களில் வந்த குறுஞ்செய்தியை நம்பி ‘கிரிப்டோ கரன்சி’ முறையில் பல தவணைகளில் முதலீடு செய்து ரூ.1 கோடியே 44 லட்சத்து 67 ஆயிரத்து 136 பணத்தை இழந்துள்ளனர். தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்பதை கூட அறியாமல் பெருந்தொகையை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து தொடர்ச்சியாக ஏமாந்துள்ளனர்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய போலீசாரில் சிலர் இதுபோன்ற போலியான அறிவிப்புகளை நம்பி ஏமாற்றப்படுகிறார்கள். எனவே விழிப்புணர்வுடன், பண முதலீடுகளை கவர்ந்து இழுக்கும் சமூக வலைத்தளங்களின் ஆசை அறிவிப்புகளுக்கு மயங்காமல் இருக்க வேண்டும். நியாயமான முறையில் தங்களது சேமிப்புகளை தரமான வங்கி மற்றும் முதலீடுகளில் செலுத்தி ஆதாயங்களை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

3-ம் தவணை தடுப்பூசி அவசியம்

மேலும் கொரோனா 3-ம் தவணை தடுப்பூசியை போலீசார் செலுத்தி கொள்வது குறித்தும் கமிஷனர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த ஒரு வார காலமாக கொரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கி இருப்பது அறிக்கைகள் மூலம் தெரிய வருகிறது. எனவே நாம் வரும் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா 3-ம் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டு போலீசார் தங்களையும், தங்களது குடும்ப உறுப்பினர்களையும் நோய் தொற்றில் இருந்து காத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

Next Story