யார் அந்த மருதமலை பாம்பாட்டி சித்தர்? அமைச்சர் துரைமுருகன் கேள்விக்கு சேகர்பாபு பதில்


யார் அந்த மருதமலை பாம்பாட்டி சித்தர்? அமைச்சர் துரைமுருகன் கேள்விக்கு சேகர்பாபு பதில்
x
தினத்தந்தி 5 May 2022 10:00 PM GMT (Updated: 2022-05-06T03:30:30+05:30)

யார் அந்த மருதமலை பாம்பாட்டி சித்தர்? என்று கேட்ட அமைச்சர் துரைமுருகனுக்கு, சேகர்பாபு ஆன்மிக விளக்கம் அளித்தார்.

சென்னை,

சட்டசபையில் நேற்று மருதமலை பாம்பாட்டி சித்தர் குறித்து கலகலப்பான விவாதம் நடந்தது. சட்டசபையில் கேள்வி நேரத்தில், அ.தி.மு.க. உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன் (கோவை வடக்கு), ‘மருதமலை சுப்பிரமணியசாமி கோவில் உள்ளே இருக்கும் பாம்பாட்டி சித்தர் கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்து கூறியதாவது:-

பாம்பாட்டி சித்தர் கோவிலுக்கு அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடக்க வேண்டியுள்ளது. இருப்பினும் முன்கூட்டியே அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த இடத்தில் ரம்மியமான சூழலை உருவாக்கி பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து தரப்படும்.

மேலும், அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்துள்ளோம். இந்த ஆண்டு மானிய கோரிக்கை அறிவிப்புகளிலே பணிகள் மேற்கொள்வதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புத்தகத்தை புரட்டி பார்த்தால் தெரியும்.

பாம்பாட்டி சித்தர் யார்?

அம்மன் கே.அர்ஜுனன் (அ.தி.மு.க.) :- மருதமலை முருகன் கோவில் பிரசித்தி பெற்றது என்றால் அது பாம்பாட்டி சித்தரால் தான். அமைச்சர் சொன்னதை செய்வார் என்றால் பாம்பாட்டி சித்தர் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பக்தர்களுக்கும் அருள் புரிவார். அமைச்சர் பதிலுக்கு நன்றி. வணக்கம்.

சபாநாயகர்:-அவையிலே இருங்க, போயிடாதீங்க.

அமைச்சர் துரைமுருகன்:-பாம்பாட்டி சித்தர் பற்றி உறுப்பினர் இவ்வளவு சொன்னாரே, அவர் யாருங்க? சொல்லுங்க அவருடைய வரலாற்றை உறுப்பினர் சொன்னால் நல்லாயிருக்கும்.

அமைச்சர் சேகர்பாபு:- கி.பி. 12-ம் நூற்றாண்டில் மருதமலை முருகன் கோவிலில் அவர் தவம் இருந்து, சித்து வேலை செய்து, சர்பமாக (பாம்பு) முருகனை வழிபட்டார் என்பது வரலாறு. தென்காசி மாவட்டத்தில் அவர் ஜீவ சமாதி அடைந்தார்.

அந்த ஜீவ சமாதியை தனியார் நிர்வகித்து வருகின்றனர். சித்தமெல்லாம் சிவ மயம் என்பது ஒரு புறம் இருந்தாலும், ஜீவநாடியில் நிறைந்து இருப்பவர்கள் எல்லாம் சித்தர்கள் தான். அதை முழுமையாக இந்த அரசு ஏற்றுக்கொண்டதால்தான் 3 சித்தர்களுக்கு விழா எடுக்க மானிய கோரிக்கையில் தெரிவித்துள்ளோம். நீங்கள் விட்டு சென்றதை, தொடாத பணிகளை இந்த அரசு செய்து வருகிறது.

ஆன்மிக மணம் கமிழ்ந்தது

சபாநாயகர்:- சித்தர் வரலாறு தொடங்கி அகில உலக வரலாறு எல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கீங்க (இவ்வாறு சபாநாயகர் குறிப்பிட்டதும் அமைச்சர் சேகர்பாபு தனது இருக்கையில் இருந்து இருகை கூப்பி நன்றி தெரிவித்தார்.)

பாம்பாட்டி சித்தர் குறித்த கேள்வியால் அவையில் ஆன்மிக மணம் கமிழ்ந்தது.

பெண்கள் கல்லூரி

சட்டசபையில் புரட்சிபாரதம் கட்சி உறுப்பினர் ஜெகன்மூர்த்தி (கே.வி.குப்பம்) பேசுகையில், ‘கே.வி.குப்பத்தில் பெண்கள் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். இங்குள்ள கல்லூரிகள் இருபாலினரும் படிக்கும் கல்லூரிகளாக இருப்பதால், பல கிராமங்களில் மாணவிகளை இரு பாலினர் கல்லூரிக்கு அனுப்பாமல் இருக்கின்றனர். இதனால் அவர்கள் வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகிறது. எனவே அங்கு பெண்கள் கலைக்கல்லூரி வேண்டும்’ என்று கூறினார்.

அமைச்சர் பொன்முடி:- எல்லாரும் தங்கள் தொகுதிக்கு கல்லூரி வேண்டும் என கேட்கிறார்கள். நீங்கள் வைக்கும் கோரிக்கையும் தவறு இல்லை. தற்போது அரசு கல்லூரி இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நீங்கள் கேட்கும் பெண்கள் அரசு கலைக்கல்லூரி நிதி நிலைக்கு ஏற்ப வரும் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இல்லை என்பதை அழகாக சொன்ன அமைச்சர்

அமைச்சர் துரைமுருகன்:- இல்லை என்பதை இவ்வளவு அழகாக சொன்ன ஒரே அமைச்சர் இவர்தான்.

இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக குறிப்பிட்டதும், அவையில் இருந்தவர்கள் கலகலவென சிரித்தார்கள்.

இதற்கு அமைச்சர் பொன்முடி, ‘இந்த பதிலை சொல்ல சொன்னவரே இவர் (துரைமுருகன்) தான். குடியாத்தம், காட்பாடியில் கல்லூரி இருக்கு என சொன்னார்.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டதும் அவையில் மீண்டும் சிரிப்பலை எழுந்தது.

Next Story