நில அளவை பணியை மேற்கொள்ள வி.ஏ.ஓ.க்களை அனுமதிக்கும் அரசாணையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி


நில அளவை பணியை மேற்கொள்ள வி.ஏ.ஓ.க்களை அனுமதிக்கும் அரசாணையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
x
தினத்தந்தி 6 May 2022 3:43 AM IST (Updated: 6 May 2022 3:43 AM IST)
t-max-icont-min-icon

நில அளவை பணியை கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.க்கள்) மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கிய அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நில அளவை பணிகளை கிராம நிர்வாக அலுவலர்களும் மேற்கொள்வதற்கு அனுமதி அளித்து கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு நில அளவையர்கள் மத்திய சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், நில அளவை பணிகளை மேற்கொள்வதற்கு நிபுணத்துவம் பெற்று, அந்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம். எந்தவித பயிற்சியும் இன்றி கிராம நிர்வாக அலுவலர்களை நில அளவை பணியில் ஈடுபட அனுமதிப்பது சட்ட விரோதம் என்று கூறப்பட்டு இருந்தது.

பயிற்சி

இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘2 பதவிகளுக்கும் அடிப்படை கல்வி தகுதி 10-ம் வகுப்பு தான். நில அளவை பணிகளை மேற்கொள்வதற்காக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

சர்வே எண்களின் உட்பிரிவுடன் பட்டா வழங்கக் கோரி ஆன்-லைன் மூலம் விண்ணபித்த 6 லட்சத்து 40 ஆயிரம் மனுக்கள் நிலுவையில் உள்ளதால், அதனை விரைந்து வழங்கும் வகையில்தான் கிராம நிர்வாக அலுவலர்கள் நிலஅளவை பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்ல ‘அரசின் உத்தரவை எதிர்த்து இதுபோல ஊழியர்கள் சங்கங்கள் வழக்கு தொடர உரிமை இல்லை’’ என்று வாதிட்டார்.

உரிமை இல்லை

இதையடுத்து நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘பணி தொடர்பான விவகாரத்தில் அரசின் உத்தரவுகளை எதிர்த்து சம்பந்தப்பட்ட ஊழியர்தான் வழக்கு தொடர முடியுமே தவிர, அவர்கள் உறுப்பினர்களாக உள்ள சங்கத்தின் சார்பில் வழக்கு தொடர அடிப்படை உரிமை இல்லை’’ என்றுக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story