விசாரணை கைதி விக்னேஷ் மரணம்: சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு...!


விசாரணை கைதி விக்னேஷ் மரணம்: சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு...!
x
தினத்தந்தி 6 May 2022 12:21 PM IST (Updated: 6 May 2022 12:21 PM IST)
t-max-icont-min-icon

விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தனர்.

சென்னை,

சென்னையில் போலீஸ் கஸ்டடியில் இருந்த விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் அடைந்தார். அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும், போலீசார் அடித்து துன்புறுத்தியதன் காரணமாகவே விக்னேஷ் உயிரிழந்தார் என்றும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். விக்னேஷின் மரணத்துக்கு அரசியல் கட்சியினரும் நீதி கேட்டனர். குறிப்பாக இந்த பிரச்சினையை அ.தி.மு.க. சட்டசபையிலும் எழுப்பியது.

அதன்பின்னர் விக்னேசின் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவியையும் அளித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், சட்டசபையில் இன்றும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இதுபற்றி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்தது, பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. எனவே, இந்த வழக்கை தமிழக காவல்துறை அதிகாரிகள் விசாரித்தால்  நியாயம் கிடைக்காது. 

நேர்மையான முறையில் விசாரணை நடைபெற வேண்டுமானால் இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்’ என வலியுறுத்தினார். பின்னர் இந்த கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த வழக்கு பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்தார். விக்னேஷ் மரணம் விவகாரத்தில் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், பிரேத பரிசோதனை அடிப்படையில் கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடப்பதாக தெரிவித்தார். 

Next Story