திண்டுக்கல்: கார்களில் கடத்திவந்த ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - 6 பேர் கைது...!


திண்டுக்கல்: கார்களில் கடத்திவந்த ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - 6 பேர் கைது...!
x
தினத்தந்தி 6 May 2022 3:13 PM IST (Updated: 6 May 2022 3:13 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே கார்களில் கடத்தி வந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வேடசந்தூர்,

பெங்களூருவில் இருந்து கார்களில் வேடசந்தூர் வழியாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்படி திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, சேக்தாவூத், மாரிமுத்து, தனிப்பிரிவு போலீசார் குமாரசாமி உள்ளிட்ட தனிப்படை போலீசார் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கரூர்- திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் கல்வார்பட்டி சோதனைச்சாவடியில் இன்று அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திண்டுக்கல் நோக்கி வேமாக வந்த காரை சோதனைச்சாவடியில் நிறுத்தி போலீசார் கார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவித்தார்.

இதனையடுத்து தனிப்படை போலீசார் சந்தேகமடைந்து காரை சோதனை செய்தபோது காருக்குள் மூட்டை முட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டு பிடித்தனர்.

அதன் பிறகு ஒன்றன்பின் ஒன்றாக வந்த 3 கார்களை நிறுத்தி சோதனை செய்தபோது அதே போல மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 4 கார்கள் மற்றும் உடன் காரை ஓட்டி வந்த 6 பேரையும் கூம்பூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,

4 கார்களிலும் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 910 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. மேலும் புகையிலை பொருட்களை கடத்தி வந்த இளையபாரதி(24), ஜீவா(23), சரத்மோகன்(28), ரத்தீஷ்(34), அஜித்முரளி(34), விஷ்னு(31) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்கள் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள மதுரை, நாகர்கோவில் மற்றும் கேரளாவிற்கும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்றதும் பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தெரியவந்தது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story