தண்டவாளத்தில் வெடிகுண்டு பதுக்கிய ரவுடிகள் உள்பட 4 பேர் கைது 5 குண்டுகள் பறிமுதல் பரபரப்பு தகவல்
புதுவையில் தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கிய 3 ரவுடிகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மேலும் 5 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரி
புதுவையில் தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கிய 3 ரவுடிகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மேலும் 5 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தண்டவாளத்தில் வெடிகுண்டு
புதுச்சேரி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு பள்ளி பின்புறம் நேற்று இரவு ரெயில் தண்டவாளத்தில் பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே உருளையன்பேட்டை போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மோப்ப நாய் உதவியுடன் அப்பகுதியில் சோதனை செய்து தண்டவாளத்தில் பதுங்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை போலீசார் கைப்பற்றினர்.
இந்த பரபரப்பு சம்பவம் தொடர்பாக உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்தது யார்? எதற்காக பதுக்கி வைக்கப்பட்டது என தீவிர விசாரணை நடத்தினார்கள்.
4 பேர் கைது
விசாரணையில், தண்டவாளத்தில் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்தது சின்ன கொசப்பாளையம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் ரிஷி (வயது 22) என்பதும், இதில் அவரின் கூட்டாளிகளான பெரியார் நகர் கோபால் மகன் கவுதம் (23), அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் (23), கவியரசன் (22) ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அரியாங்குப்பம் பகுதியில் பதுங்கி இருந்த ரிஷி உள்பட 4 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
கொலை திட்டம்
கைதான ரிஷிக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. இந்தநிலையில் இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. அந்த பெண்ணை 2-வது திருமணம் செய்துகொள்ள அவரின் அண்ணனிடம் பெண் கேட்டுள்ளார். அதற்கு அவர், ரிஷியை அடித்து அவமானப்படுத்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் அவரை கொலை செய்ய ரிஷி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டினார். அதன்படி 4 பேரும் வெடிகுண்டுகள் தயாரித்து காதலித்த பெண்ணின் அண்ணனை கொலை செய்ய திட்டமிட்டனர். இதற்காக மொத்தம் 6 வெடிகுண்டுகள் தயாரித்தனர்.
வெடிகுண்டுகள் பறிமுதல்
அதில் காராமணிக்குப்பம் ரெயில்வே தண்டவாளம் அருகே 2 வெடிகுண்டுகளையும், வனத்துறை பகுதியில் 3 வெடிகுண்டுகளையும், கவுதம் வீட்டில் ஒரு வெடிகுண்டும் பதுக்கி வைக்கப்பட்டன. அவர்கள் அளித்த தகவலின் பேரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 நாட்டு வெடிகுண்டுகள், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் பத்திரமாக கைப்பற்றப்பட்டன.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரிஷி, கவுதம், அரவிந்த் ஆகியோர் ரவுடிகள் ஆவார்கள். அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவ்வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story