லாபத்தில் பங்கு தருவதாக கூறி ரூ.20 லட்சம் நூதன மோசடி
ஜவுளிக்கடையில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஜவுளிக்கடையில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நிதி நிறுவனத்தில் முதலீடு
சேலம் மாவட்டம் மேட்டூர் தங்கம்மா பூரிப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவரது மனைவி இன்பவள்ளி (வயது 45). டெய்லரிங் தொழில் செய்து வருகிறார். இவரும் அந்த பகுதியை சேர்ந்த சிலரும் அங்குள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தனர்.
இந்த நிலையில் அந்த நிறுவனத்தினர் பணத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர்கள் கோவை பொருளாதார குற்ற பிரிவு போலீசில் புகார் செய்தனர். அவர்களுடன் புதுச்சேரி காந்திநகரை சேர்ந்த கனகராஜ் மனைவி ஆமினா பேகமும் புகார் செய்தார்.
ரூ.20 லட்சம் மோசடி
அப்போது ஏற்பட்ட பழக்கத்தின் மூலம் இன்பவள்ளியிடம், புதுச்சேரியில் ஜவுளி கடை வைத்திருப்பதாகவும் அதில் முதலீடு செய்தால், கிடைக்கும் லாபத்தில் பங்கு தருவதாகவும் ஆமினா பேகம் கூறினார். இதை நம்பிய இன்பவள்ளி உள்ளிட்ட பலர் சுமார் ரூ.20 லட்சம் வரை முதலீடு செய்தனர். ஆமினா பேகம் கூறியபடி முதல் மாதம் மட்டும் ரூ.1 லட்சத்திற்கு ரூ.5 ஆயிரம் வீதம் பணம் கொடுத்துள்ளார். அதன்பின் அவர் பணத்தை கொடுக்கவில்லை.
இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்த இன்பவள்ளி மற்றும் சிலர் ஆமினா பேகம் மீது புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசில் கடந்த 2019-ம் ஆண்டு புகார் செய்தனர்.
பெண் கைது
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆமினா பேத்துடன், இன்பவள்ளி உள்பட பலர் ஒப்பந்தம் செய்தது போல போலியாக ஒரு ஒப்பந்த பத்திரத்தை ஆமினா பேகம் போலீசில் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.
இந்த மோசடி குறித்து கோரிமேடு போலீசில் இன்பவள்ளி புகார் அளித்தார். அதன்பேரில் கோரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆமினா பேகத்தை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story