பட்டினப்பிரவேசம் மீதான தடை தமிழக கலாசாரத்துக்கு எதிரானது அண்ணாமலை அறிக்கை


பட்டினப்பிரவேசம் மீதான தடை தமிழக கலாசாரத்துக்கு எதிரானது அண்ணாமலை அறிக்கை
x
தினத்தந்தி 6 May 2022 6:41 PM GMT (Updated: 6 May 2022 6:41 PM GMT)

தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாசாரத்துக்கு எதிரானது என அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தருமபுரம் ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான பட்டினப்பிரவேசம் மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாசாரத்திற்கு எதிரானது. ஆதீனத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி, தமிழர்களின் மரபுக்கும், மாட்சிக்கும், மகத்துவத்திற்கும் எதிரான ஆட்சியாகும். தொன்மையான தமிழர் மரபுகளை அழிப்பதன் மூலம், தோல்வி அடைந்த தங்கள் கொள்கைகளை துளிர்க்கச் செய்யலாம் என்ற எண்ணத்தில் இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தி.மு.க. ஆட்சியை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சொன்ன சொல் காய்வதற்குள்...

தருமபுர ஆதீனம் சமீபத்திய முதல்-அமைச்சர் உடனான கூட்டத்தில், இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ற தத்துவத்தின் அடிப்படையில், நடைபெற்றுக் கொண்டிருக்கும் தி.மு.க. ஆட்சியை, ஆன்மிக ஆட்சி என்று கூறியிருந்தார். அதைக் கேட்டவுடன், தாங்கள் தமிழர் மரபின் வழிவந்த ஆன்மிகவாதிகள் இல்லை. தமிழ்ப் பாரம்பரியத்தின் ஆன்மிக ஆட்சியாளர்கள் இல்லை என்று நிரூபித்திருக்கிறார்கள். அதிலும் அவர் சொன்ன சொல் காய்வதற்குள் நிரூபிக்க வேண்டிய அவசியத்தினால் திட்டமிட்டு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையும், தொன்மையும், பாரம்பரியமும், பெருமையும், அருமையும் மிக்கத் தருமை ஆதீனத்தை சிறுமை செய்ய நினைத்திருக்கிறார்கள்.

ஆதீனங்கள் எனும் அருள் ஞான சுடர்களை சுமப்பதை, ஆன்மிகப் பெரியோர்களை, குருமார்களை மதிப்பதை மனிதனை மனிதன் தூக்கும் பல்லக்கு என்று பார்ப்பது அஞ்ஞானமே, அறியாமையே. தி.மு.க. அரசு பிறப்பித்த, இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து, அரசின் காழ்ப்புணர்ச்சிக்கு கண்டனம் தெரிவித்து, கண்டன நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதீனத்திடம் கோரிக்கை வைப்போம்.

சேவைக்கான சுமப்பு

சுயநலத் தேவைக்காக சுமக்கும் நிகழ்வு அல்ல இது. ஊழியம் மற்றும் குருவுக்குச் செய்யும் சேவைக்கான சுமப்பு இது. அறிவுப் பகலவனாக விளங்கிய, அகவை மூத்த அப்பர் பெருமான், பிள்ளைப் பிராய திருஞானசம்பந்தரின் பல்லக்கைத் தோளில் சுமந்ததை, தன் பிறவிப் பெரும் பயன் என்று பெருமை கொண்ட பாரம்பரியத்தின் வழிவந்த தமிழர்களை, தமிழக அரசு ஏளனம் செய்கிறதா அல்லது எதிர்க்கிறதா?.

ஆயிரக்கணக்கான வருடங்களாக கடைப்பிடிக்கும் தமிழ் மரபுகளின் மாண்பை சீர்குலைக்கும் வகையில், தேவைக்கும் சேவைக்குமான வேறுபாடுகளைக் கூட அறியாதவர்களா இவர்கள்? இறைவனுக்கும், குருமார்களுக்கும் மரியாதை கொடுக்க நான் தயார். இந்தப் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை நடத்திக்காட்ட பா.ஜ.க. தயாராக இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story