‘ஷவர்மா’ சாப்பிட்ட கால்நடை மருத்துவ மாணவர்கள் 3 பேருக்கு வாந்தி-மயக்கம்


‘ஷவர்மா’ சாப்பிட்ட கால்நடை மருத்துவ மாணவர்கள் 3 பேருக்கு வாந்தி-மயக்கம்
x
தினத்தந்தி 7 May 2022 1:36 AM IST (Updated: 7 May 2022 1:36 AM IST)
t-max-icont-min-icon

‘ஷவர்மா’ சாப்பிட்ட கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தஞ்சாவூர்,

கேரளாவில் ‘ஷவர்மா’ சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 17 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் ‘ஷவர்மா’ சாப்பிட்ட கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த விவரம் வருமாறு:-

கால்நடை மருத்துவ மாணவர்கள்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரை சேர்ந்த பிரின்ஸ் மகன் பிரவீன்(வயது 22), புதுக்கோட்டை மாவட்டம் ஈச்சன்குடியை சேர்ந்த சேகர் மகன் பரிமளேஸ்வரன்(21), தர்மபுரி மாவட்டம் மதுப்பட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் மணிகண்டன் (21) ஆகியோர் விடுதியில் தங்கியிருந்து இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர்.

வாந்தி-மயக்கம்

நேற்று முன்தினம் இரவு இவர்கள் 3 பேரும், ஒரத்தநாடு-தென்னமநாடு பிரிவு சாலை பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட துரித உணவகத்திற்கு சென்று தங்களுக்கு பிடித்த உணவான ‘ஷவர்மா’வை விரும்பி வாங்கி சாப்பிட்டனர். பின்னர் 3 பேரும் விடுதிக்கு சென்று அங்கு சக மாணவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தனர். திடீரென இவர்களுக்கு உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

ஆஸ்பத்திரியில் அனுமதி

அப்போது தாங்கள் ‘ஷவர்மா’ சாப்பிட்டதாக மாணவர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து சக மாணவர்கள் அவர்கள் 3 பேரையும் ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு 3 பேரும் கொண்டு வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா, தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்து அங்கு சிகிச்சை பெற்று வரும் மாணவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மாணவர்கள் நலமுடன் இருப்பதாக அவர் கூறினார்.

உணவகத்தை மூடினர்

பின்னர் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஒரத்தநாட்டிற்கு சென்று சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த உணவகம் உரிமம் இல்லாமல் செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த உணவகத்தை தற்காலிகமாக மூடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

இந்த நிலையில், நாகை வண்டிப்பேட்டை பகுதியில் அதிகாரிகள் ஒரு இறைச்சி கடையில் நடத்திய சோதனையில், அங்கு மற்ற கடைகளுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த 250 கிலோ கெட்டுபோன இறைச்சி இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதேபோல நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள ஓட்டல்களில் 60 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி இருந்தது கண்டுபிடித்து பறிமுதல் செய்யப்பட்டது.



Next Story