விரைவில் அரசியல் பயணம்...! ஜெயலலிதா ஆட்சியை போன்றே குறையில்லா ஆட்சி ...! - சசிகலா சொல்கிறார்


விரைவில்  அரசியல் பயணம்...! ஜெயலலிதா ஆட்சியை போன்றே குறையில்லா ஆட்சி ...! - சசிகலா சொல்கிறார்
x
தினத்தந்தி 7 May 2022 3:44 PM IST (Updated: 7 May 2022 3:44 PM IST)
t-max-icont-min-icon

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா எப்படி ஆட்சி செய்தார்களோ, நிச்சயமாக அதேமாதிரி எந்த குறையும் இல்லாமல் ஆட்சி செய்வோம் என சசிகலா கூறினார்.

திருச்செந்தூர்,

தென்மாவட்டங்களில் மீண்டும் ஆன்மீக சுற்றுபயணத்தை மேற்கொண்டுள்ள சசிகலா, இன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதிகாலை நடைபெற்ற விஸ்வரூப தீபாராதணையில் கலந்துகொண்டு 5-அடி உயர வெண்கல வேலினை கோவிலிலுக்கு காணிக்கையாக செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த சசிகலா கூறியதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வேல் காணிக்கை செலுத்துவதற்காக வந்துள்ளேன். அதிமுகவை கைப்பற்றுவது என்பது அல்ல, அதிமுக எங்களுடைய கட்சிதான். தொண்டர்கள் அனைவரும் உள்ளனர். தொண்டர்களில் இருந்து தான் தலைவர்களை உருவாக்குகிறோம். என்னுடைய அரசியல் பயணம் விரைவில் தொடங்கப்படும்.

திமுகவின் ஓராண்டு ஆட்சியில் நிறைய செய்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் மக்களுடைய மனசு நிறைந்ததாக தெரியவில்லை. சட்ட ஒழுங்கு சரியாக இல்லை. மக்கள் ரொம்ப கஷ்டப் படுகிறார்கள். மின்சார தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு கொடுத்ததாக கூறுகிறார்கள். ஆனால் மின்சாரமே வரவில்லை என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

வீட்டிற்கு ஆயிரம் ரூபாய் தருவதாக திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தார்கள். ஆனால் ஒரு வருடம் ஆகிவிட்டது இதுவரை கொடுக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை முதியோர் உதவித்தொகை கொடுக்க வில்லை. மொத்தத்தில் மக்கள் மனதில் இந்த ஆட்சி மீது வெறுப்புதான் ஏற்பட்டுள்ளது.

இன்னும் குறிப்பாக சொல்ல போனால் சட்டம்-ஒழுங்கு ரொம்ப சீர்கேடாக உள்ளது. சென்னை மாதிரி உள்ள இடங்களில் செயின் பறிப்பு மிக அதிகமாக உள்ளது. பெண்கள் இரவு 9 மணிக்கு மேல் வெளியே செல்ல ரொம்ப கஷ்டப் படுகிறார்கள். மக்கள் யாரும் திருப்தியாக இல்லை. இதுதான் ஓர் ஆண்டு கால திமுக ஆட்சியின் பலனாக உள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா எப்படி ஆட்சி செய்தார்களோ, நிச்சயமாக அதேமாதிரி எந்த குறையும் இல்லாமல் ஆட்சி செய்வோம். ஜெயலலிதா‌ ஆட்சியில் இருந்த போது எங்களுடைய கட்சிக்காரர்கள் போலீஸ் நிலையத்தில் எதுவும் கேட்க முடியாது.

 அந்த அளவுக்கு கட்டுப்பாடாக வைத்திருந்தார்கள். தற்போது திமுக ஆட்சியில் கரைவேட்டி கட்டியவர்கள்தான் போலீஸ் நிலையத்தில் அதிகமாக இருக்கிறார்கள் என மக்களே கூறுகின்றனர். இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் மக்கள் சுதந்திரமாக இருக்க முடியும்.

அதுமட்டுமல்ல, நான் நிறைய கிராமங்களுக்கு சென்று வந்தேன் அங்கே உள்ள சிறு கடை வியாபாரிகள் என்ன சொல்கிறார்கள் என்றால், மாதந்தோறும் எங்களுக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்றும், சிறிய பழக்கடை, பூக்கடை வைத்துள்ளவர்களிடம் 2 ஆயிரம், 3 ஆயிரம் கொடுங்கள் என திமுகவினர் மிரட்டும் பாணியில் கேட்பதாக கூறுகிறார்கள்.

இது எல்லாம் ஜெயலலிதா இருந்த ஆட்சியில் இல்லை. அதேபோல் சென்னை அருகே கம்பெனிகள் அதிகம் உள்ள இடம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அந்த தொகுதியில் நடக்கிறதை அங்குள்ளவர்கள் என்னிடம் நேரடியாக வந்து சொன்னார்கள். மாதம் ரூ.10 ஆயிரம் கொடுங்கள் என திமுக காரர்கள் கேட்பதாக கூறுகிறார்கள். இது மாதிரியான சம்பவங்கள் முதல்-அமைச்சருக்கு தெரியுமா என்பது எனக்கு தெரியவில்லை. இது மாதிரி சம்பவங்கள் நடக்காமல் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கையாகும். இவ்வாறு சசிகலா கூறினார்.

Next Story