கும்பகோணம்: ஒரே ரெயில் என்ஜினில் அடுத்தடுத்து 2 வாலிபர்கள் சிக்கி பலி
கும்பகோணம் பகுதியில் ரெயில் என்ஜினில் சிக்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே உள்ள அந்தமங்கலம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மகன் சுரேஷ் (வயது 30 ) இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் சுரேஷ் இன்று அதிகாலை 1 மணிக்கு தான் வேலை பார்க்கும் நிதி நிறுவனதை சேர்ந்த உயர் அதிகாரிகள் 2 பேரை கும்பகோணம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்ஸில் ஏற்றி சேலத்திற்கு வழி அனுப்பி வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கும்பகோணம் மேம்பாலத்திற்கு கீழே தனது பைக்கை நிறுத்திவிட்டு அந்த பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தை சுரேஷ் கடக்க முயன்றுள்ளார். அப்போது திருச்சியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்துகொண்டிருந்த ரெயில் எஞ்சின் மோதியதில் சுரேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்.
வாலிபர் ஒருவர் ரெயிலில் சிக்கி இறந்து கிடப்பதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் கும்பகோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் சுரேஷின் சிதறிய உடல் பாகங்களை சேகரித்து பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சுரேஷ் மீது மோதிய அதே ரெயில் என்ஜின் இன்று அதிகாலை 1.40 மணிக்கு திருவிடைமருதூர் அருகே வந்துகொண்டிருந்தபோது திருவிடைமருதூர் புதுதெரு பகுதியைச் சேர்ந்த போட்டோகிராஃபர் மணிகண்டன் (32) என்பவர் அந்தப் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அதே ரயில் என்ஜினில் சிக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் இது குறித்து தங்களது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை தொடர்ந்து ரயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரே நேரத்தில் 2 வாலிபர்கள் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஒரே நேரத்தில் இரண்டு வாலிபர்கள் ஒரே ரெயில் என்ஜினில் சிக்கி அதற்கான காரணம் என்ன? ரயில் என்ஜினில் முகப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்ததா? அல்லது என்ஜின் வருவது தெரியாமல் வாலிபர்கள் தண்டவாளத்தை கடக்க முயன்றதால் ரயிலில் அடிபட்டு உயிர் இழந்தனரா?! என்பது குறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story