கல்வி சான்றிதழ் கட்டண உயர்வை அண்ணா பல்கலைக்கழகம் திரும்ப பெறவேண்டும் - அன்புமணி ராமதாஸ்


கல்வி சான்றிதழ் கட்டண உயர்வை அண்ணா பல்கலைக்கழகம் திரும்ப பெறவேண்டும் - அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 7 May 2022 10:05 PM IST (Updated: 7 May 2022 10:05 PM IST)
t-max-icont-min-icon

கல்விக்கான சான்றிதழ்களின் கட்டணத்தை இந்த அளவுக்கு உயர்த்துவது கந்துவட்டி வணிகத்துக்கு ஒப்பானது என்றும், அதனை அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கந்து வட்டி வணிகத்துக்கு ஒப்பானது

அண்ணா பல்கலைக்கழகத்தில் 23 வகையான சான்றிதழ்களைப் பெறுவதற்கும், அவற்றில் திருத்தம் செய்வதற்குமான கட்டணங்கள் 1000 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருக்கின்றன. கல்விக்கான சான்றிதழ்களின் கட்டணத்தை இந்த அளவுக்கு உயர்த்துவது கந்துவட்டி வணிகத்திற்கு ஒப்பானது; கண்டிக்கத்தக்கது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்து விட்டாலோ, சேதம் அடைந்து விட்டாலோ அதற்கு பதிலாக புதிய சான்றிதழ் வாங்குவதற்கு இதுவரை ரூ.300 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது அந்த கட்டணம் 10 மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. பிற சான்றிதழ்களின் கட்டணங்களும் குறைந்தது 66 சதவீதம் முதல் 400 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு மாநிலம் முன்னேற கல்வி மிகவும் அவசியம் ஆகும். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பள்ளிக்கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. முதல் பட்டதாரி உள்ளிட்ட சில குறிப்பிட்ட பிரிவினருக்கு உயர்கல்வியும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து பிரிவினருக்கும், அனைத்து வகையான கல்வியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், உயர்கல்விக்கான சான்றிதழுக்கு ரூ.10 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதும், சான்றிதழ் கட்டணத்தை 1000 சதவீதம் வரை உயர்த்துவதும் எந்த வகையில் நியாயம் என்பதை அண்ணா பல்கலைக்கழகம்தான் விளக்கவேண்டும்.

திரும்பபெற வேண்டும்

பொறியியல் படிக்கும் மாணவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் அல்ல. அவர்களின் பெரும்பான்மையினர் கல்விக்கட்டணம் செலுத்தவே வாய்ப்பும், வசதியும் இல்லாதவர்கள். இதைக் கருத்தில் கொண்டு சான்றிதழ்கள் மற்றும் சான்றிதழ்கள் தொடர்பான அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்குவது தான் சரியானதாக இருக்கும்.

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றவர் அண்ணா. அவரது பெயரில் செயல்படும் பல்கலைக்கழகம் ஏழை மாணவர்களை சிரிக்க வைக்க வேண்டும்; அழ வைக்கக்கூடாது. சான்றிதழ் கட்டணங்களை உயர்த்துவதால் பல்கலைக்கழகத்திற்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்காது.

அண்ணா பல்கலைக்கழகம் சான்றிதழ் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம் மாணவர்களின் உணர்வுகளையும் மதிக்கவில்லை; மாணவர்களின் பொருளாதார நிலையையும் புரிந்து கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. சான்றிதழ் கட்டண உயர்வு மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்பதால், அதை அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாக திரும்பபெற வேண்டும். இதுகுறித்து பல்கலைக்கழகத்துக்கு அரசும் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story