குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு - ஆதினங்கள் பங்கேற்பு...!
குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆதீனங்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம்.
குத்தாலம்,
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான பரிமள சுகந்த நாயகி உடனாய உக்தவேதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. திருத்துருத்தி என்று அழைக்கப்படும் இந்தகோவிலில் சுவாமி மணவாள நாதர் திருக்கோலத்துடன் அருள்பாலிக்கிறார்.
தேவாரப்பாடல் பெற்ற இந்ததலத்தில் பார்வதிதேவியை மணம் முடிக்க சிவபெருமான் கைலாயத்தில் இருந்து வந்த போது அவருக்கு துணையாக வந்த உத்தால மரமும், சிவபெருமானின் பாதரட்ஷையும் இன்றும் இந்தகோவிலில் உள்ளது.
இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. குடமுழுக்கை முன்னிட்டு கடந்த 4-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டன. தொடர்ந்து எட்டாம் கால யாகசாலை பூஜைகள் முடிவுற்று பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெற்றது.
அதனையடுத்து யாகசாலையில் இருந்து குடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வளம் வந்து விமான கலசத்தை அடைந்தன தொடர்ந்து தருமபுரம் ஆதீன 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103-வது குருமகா சன்னிதானம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள், தொண்டை மண்டல 233-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் சுவாமி சன்னதி விமானக் கலசத்திற்கு திருக்கடையூர் மகேஷ் குருக்கள் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஏககாலத்தில் சுவாமி நடராஜர் ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து சுவாமி அம்பாள் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநிஷா அறிவுறுத்தலின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட துணை சூப்பிரண்டு வசந்தராஜ் குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையின் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story